கோலாலம்பூர்: மலேசியாவில் தற்போது நடைமுறையில் உள்ள 1,700 ரிங்கிட் குறைந்தபட்ச மாதச் சம்பளத்தை மறுஆய்வு செய்யும் பணிகள் நடந்துவருவதாக அந்நாட்டின் மனிதவள அமைச்சர் ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் அடிப்படைத் தேவைகள், முதலாளிகளின் வழங்கும் திறன் ஆகியவற்றை மதிப்பிட வறுமைக்கோட்டு வருமானம், இடைநிலைச் சம்பளம் உள்ளிட்ட முக்கியக் குறியீடுகள் கவனத்தில் கொள்ளப்படுவதாக ‘உத்துசான் மலேசியா’ ஊடகத்திற்கு அளித்த நேர்காணலின்போது அமைச்சர் ரமணன் தெரிவித்தார்.
மேலும் பயனீட்டாளர் விலைக்குறியீட்டெண், ஊழியரின் உற்பத்தித்திறன், வேலையின்மை விகிதம் போன்ற காரணிகளும் கருத்தில்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
வாழ்க்கைச் செலவினங்களுக்கேற்ற நியாயமான சம்பளம் குறித்துத் துறைசார்ந்த ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை என்றார் அவர்.
அதே நேரத்தில், 2018ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் தனிமனிதர் ஒருவருக்கு 2,700 ரிங்கிட் தேவைப்படும் என மலேசிய மத்திய வங்கி மதிப்பிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசியப் புள்ளியியல் துறை அறிமுகப்படுத்திய கண்ணியமான வாழ்க்கைச் செலவின மதிப்பீடு, குடும்பங்களின் உண்மையான செலவு முறைகளை அடிப்படையாகக் கொண்டது. 13வது மலேசியத் திட்டமும் சம்பளச் சீர்திருத்தங்களை வலியுறுத்துகிறது.
ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் ஈராண்டுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்படுகிறது. 1,700 ரிங்கிட் என்ற தற்போதைய குறைந்தபட்ச சம்பளம் 2025 ஆகஸ்ட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனிடையே, குறைந்தபட்ச சம்பளத்திற்கு அப்பால், தொழிலாளர்களின் திறன் மற்றும் உற்பத்தித்திறனை எடுத்துக்காட்டும் வகையில் முற்போக்குச் சம்பளக் கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாகத் திரு ரமணன் குறிப்பிட்டார்.
“படிப்படியான சம்பள உயர்வு முறை திட்டத்தில் பங்கேற்க 5,910 முதலாளிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களில் 68.1 விழுக்காட்டினர் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியுள்ளனர். அதற்காக அரசு 73 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான ஊக்கத்தொகையை வழங்கியுள்ளது. அத்திட்டத்தின்மூலம் 51,363 ஊழியர்கள் பயனடைந்துள்ளனர்,” என்று அவர் விளக்கினார்.
உற்பத்தித்திறன் சார்ந்த சம்பள முறை அடைப்படையில் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கவும், தொழிற்சங்க அடிப்படையிலான சம்பள முறைகளை வலுப்படுத்தவும் முதலாளிகளை அரசாங்கம் ஊக்குவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“இந்தக் கொள்கையானது பொருட்படுத்தத்தக்க சம்பள உயர்வை வழங்குவதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை; முற்போக்குச் சம்பளக் கொள்கையின்கீழ் வழங்கப்படும் சம்பள உயர்வானது, அங்கீகரிக்கப்பட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் தொழிலாளர்கள் பங்கேற்பதை நிபந்தனையாகக் கொண்டுள்ளதால், அது ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் ஒரு வழிமுறையாகவும் செயல்படுகிறது,” என்று அமைச்சர் தெரிவித்தார்.


