https://www.straitstimes.com/asia/se-asia/malaysian-cabinet-approves-17-measures-to-tighten-security-at-klia-entry-points
புத்ராஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், நாட்டின் அனைத்துலக எல்லைச் சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு, சோதனை முறைகள், ஆபத்து நிர்வாகத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட 17 பரிந்துரைகளுக்கு மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மலேசிய உள்துறை, போக்குவரத்து அமைச்சுகள் இணைந்து சமர்ப்பித்த இந்த கூட்டறிக்கைக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 19) ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவற்றில் உடனடியாக நடைமுறைப்படுத்த ஆறு முக்கிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதிக ஆபத்தானதாகக் கருதப்படும் விமானங்கள், உடைமைகளும் மற்றும் பயணிகள், ஊழியர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
விமான நிலையங்களின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்லும் ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கான மின்னிலக்கச் சரிபார்ப்பு, அணுகல் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்படும்.
போதைப்பொருள் பரிசோதனைகள் தீவிரமாக்கப்படும். பாதுகாப்பை உறுதிசெய்ய விமானநிலைய முனையங்கள் 1, 2ல் கூடுதல் காவல் துறையினரும் பொது நடவடிக்கை படையினரும் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
அண்மையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியர் ஒருவர் இந்தோனீசியாவில் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட சில பாதுகாப்பு சார்ந்த சம்பவங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக விமான நிலையத்தில் இத்திட்டம் நடைமுறைப்டுத்தப்பட்டு, பின்னர் ஏனைய அனைத்துலக எல்லைச் சாவடிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
பாதுகாப்பு, உளவுத் தகவலைத் தேசிய குடிநுழைவுக் கட்டளை மையம் மூலம் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளவும், இத்திட்டங்களைக் கண்காணிக்க இரு அமைச்சுகளின் செயலாளர்கள் தலைமையில் தொழில்நுட்பக் குழுவை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


