பத்துப் பேருக்குப் பாட்டியான பின்னும் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பயில்கிறார்

பத்துப் பேருக்குப் பாட்டியான பின்னும் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பயில்கிறார்

1 mins read
4f0cbca1-0906-4c46-8640-0cbeedc4b2fd
பினாங்கிலுள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைக் கல்வி மையத்தில் பட்டக் கல்வி பயிலும் திருவாட்டி கூ மரியம் கூ ஹுசைன், 64. படம்: டுவிட்டர்/முகம்மது சொலஹுதீன் -
multi-img1 of 2

அறுபது வயது நெருங்கிவிட்டாலே பலரும் ஓய்வுபெறுவது பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிடுவர்.

ஆனால், பத்துப் பேரப்பிள்ளைகளைக் கண்டுவிட்ட இந்த மலேசியப் பாட்டியோ ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.

திருவாட்டி கூ மரியம் கூ ஹுசைன் என்ற இந்த 64 வயதுப் பெண்மணி, பினாங்கிலுள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைக் கல்வி மையத்தில் பட்டக் கல்வி பயின்று வருவதாக சினார் ஹரியான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு நிறுவன மேலாண்மை பட்டக் கல்வியை இவர் தொடங்கினார்.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக அப்போது இணையம் வழியாக வகுப்புகள் நடைபெற்றன. இப்போது இவரால் நேரடி வகுப்புகளில் பங்கேற்க முடிகிறது.

தம் மகளுடன் இவர் பல்கலைக்கழகத்திற்குச் சென்று வருகிறார். இவரது 38 வயது மகள் நூருல் ஹுடா சர்க்காடி அங்கு நிதியியல் பாடம் பயின்று வருகிறார்.

திருவாட்டி மரியத்திற்கு ஆறு பிள்ளைகளும் பத்துப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர்; இன்னொரு பேரப்பிள்ளையை விரைவில் எதிர்பார்க்கிறார்.

முன்னாள் சமயப் பாட ஆசிரியரான இப்பெண்மணி, 2013ஆம் ஆண்டில் குடல் புற்றுநோய்க்குத் தம் கணவரைப் பறிகொடுத்தார்.

திருவாட்டி மரியத்தின் கல்விப் பயணம் தங்களை ஊக்குவிப்பதாக உள்ளது என்று இணையவாசிகள் பலரும் கருத்துரைத்துள்ளனர். வாழ்நாள் கற்றலுக்கு இவர் மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார் என்று வேறு சிலர் குறிப்பிட்டுள்ளனர்.