கோலாலம்பூர்: மின்சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கும் மலேசிய அரசாங்கத்தின் முன்மொழிவு இந்த ஆண்டின் இறுதிக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது அறிவித்துள்ளார்.
“மின்சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கப்படுமா என்பது கேள்வியன்று. எப்போது தடை விதிக்கப்படும் என்பதே கேள்வி,” என்று அவர் கூறினார்.
இந்தத் தடையைச் செயல்படுத்தும் முறை, காலம் மற்றும் அணுகுமுறை குறித்த கேள்விகளே எஞ்சியுள்ளதாகவும் அவர் கூறினார்.
கோலா சிலாங்கூர் உள்விளையாட்டரங்க வளாகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ‘ஆரோக்கியமான மலேசியா’ நிகழ்ச்சியின்போது டாக்டர் ஸுல்கிஃப்லி செய்தியாளர்களிடம் பேசினார்.
மலேசிய நாடாளுமன்றத்தில் 13ஆவது மலேசியத் திட்டம் (MP13) தொடர்பான விவாத முடிவில், டாக்டர் ஸுல்கிஃப்லி அகமது சுகாதார அமைச்சின் வரைவுத் தீர்மானத்தை முன்மொழிந்து, மின்சிகரெட்டுகளுக்குத் தடை விதிப்பது பற்றிய விரிவான அறிக்கை, தம் அமைச்சின் நிபுணர் குழுவால் இறுதிசெய்யப்பட்டு வருவதாகக் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) தெரிவித்தார்.
அத்துடன், மின்சிகரெட் விவகாரங்களைக் கையாள சிலாங்கூரில் மொத்தம் நான்கு ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2033ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 81 ஆரோக்கிய மையங்களை உருவாக்குவது அரசாங்கத்தின் இலக்கு என்றார் டாக்டர் சுல்கிஃப்லி.

