ராணுவ நிதியைத் தவறாகப் பயன்படுத்திய மலேசிய உயர்மட்ட அதிகாரிகள்

2 mins read
0bbe3c1e-01c1-4373-b1b2-bbb71cc5bda6
மலேசியாவில் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளிடமிருந்து 50 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. - படம்: த ஸ்டார்

புத்ராஜெயா: மலேசியாவில் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விசாரணைகளில் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான ரொக்கமும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வழக்குத் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து மொத்தம் 40 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

ராணுவக் கொள்முதல் தொடர்பான முதல் வழக்கில் முன்னாள் ராணுவத் தலைவர் முகமது ஹஃபிஸுடின் ஜந்தானிடமிருந்து 11.4 மில்லியன் மதிப்புள்ள ரொக்கமும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் 75 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் ரொக்கம், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், ஆபரணங்கள், தங்கம், சொகுசு கார் ஆகியவை அடங்கும் என்று மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத் தலைமை ஆணையர் அஸாம் பாகி தெரிவித்தார்.

“மொத்தம் 75 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு 32.5 மில்லியன் ரிங்கிட்,” என்றார் அவர்.

4.4. மில்லியன் ரிங்கிட் ரொக்கம், 1.4 மில்லியன் மதிப்பிலான வெளிநாட்டு ரொக்கம், அதிகளவிலான ரோலெக்ஸ் கைக்கடிகார்கள், 3.4 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புடைய தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்றார் திரு அஸாம்.

மற்றொரு வழக்கில் உயர் ராணுவப் படை அதிகாரிகள் ராணுவ நிதியைச் சுய லாபத்திற்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அவர்களிடமிருந்து 8.42 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ரொக்கமும் சொத்துகளும் கைப்பற்றப்பட்டன. வழக்குத் தொடர்பிலான 12க்கும் அதிகமான வங்கிக் கணக்குகளிலிருந்த நிதியும் முடக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் 2.49 கிலோகிராம் எடையுள்ள 66 தங்கக் கட்டிகள், மூன்று வாகனங்கள், 1.5 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் ஆகியவை அடங்கும். இவற்றுடன் எட்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும் நான்கு தனியார் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

“இந்த வழக்கில் தற்காப்பு அமைச்சின் நிதியைக் கையாடிய சம்பவம் குறித்து கவனம் செலுத்தினோம். விசாரணைகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கின,” என்றார் திரு அஸாம்.

இரண்டு வழக்குகளையும் அடுத்த வாரத்துக்குள் முடித்து மேல் விவரங்களைத் தரவிருப்பதாகத் திரு அஸாம் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்