கோலாலம்பூர்: மலேசிய இந்துச் சங்கம் நாட்டிலுள்ள இந்துக் கோயில் நிர்வாகக் குழுக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அவற்றுக்குச் சாத்தியமான தீர்வுகள் குறித்தும் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்குக் கடிதம் அனுப்ப முடிவுசெய்துள்ளது.
பிரிக்ஃபீல்ட்ஸ் வட்டாரத்தின் ஜாலான் ஸ்காட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) நடைபெற்ற கூட்டத்தில் 800க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய சங்கத் தலைவர் டி.கணேசன் தேசிய அளவிலான ஒற்றுமையைத் தக்கவைப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
கோயில் தொடர்பான விவகாரங்கள், குறிப்பாக நிலம் தொடர்பானவை தெளிந்த சிந்தனையுடன் ஆராயப்பட வேண்டும் என்றார் அவர்.
“உங்கள் புகார்கள் அனைத்தையும் கேட்டறிந்து, அவற்றுக்குச் சாத்தியமான தீர்வுகள் குறித்துக் கலந்தாலோசித்த பிறகு, பிரதமருக்குக் கடிதம் அனுப்பப்படும்,” என்று திரு கணேசன் தமது உரையில் குறிப்பிட்டார்.
“கடந்த காலத்தில் நிகழ்ந்தவை கடந்த காலத்தைச் சேர்ந்தவையாக மட்டுமே இருக்கவேண்டும். அண்மையில் நடந்த கோயில் தொடர்பான சர்ச்சையில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அத்தகைய விவகாரம் மீண்டுமொருமுறை நடைபெறாமலிருக்க அது அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்குப் பிரதமர் அலுவலகப் பிரதிநிதியிடம் கடிதம் சமர்ப்பிக்கப்படும் என்று தகவல்கள் கூறின.
பிரிக்ஃபீல்ட்சில் நடைபெற்ற கூட்டத்தில் மலேசியா முழுவதுமுள்ள கோயில் நிர்வாகக் குழுக்களின் பிரதிநிதிகளுடன் மலேசிய இந்துச் சங்க உறுப்பினர்களும் இந்துச் சமூகத்தினரும் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, புதிய பள்ளிவாசலைக் கட்டுவதற்காக 130 ஆண்டுகள் பழைமையான தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலை ஜாலான் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்திலிருந்து இடமாற்றுவதற்கான திட்டத்துக்குப் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர். அதையடுத்து மலேசிய இந்துச் சங்கம் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.
தற்போது கோயில் அமைந்திருக்கும் 4,000 சதுர அடிக்கு ஈடாக அதேயளவு நிலம் புதிய இடத்தில் வழங்கப்பட்டதால், தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் நிர்வாகம் தற்போதைய இடத்திலிருந்து 50 மீட்டர் தள்ளி அமைந்திருக்கும் புதிய இடத்திற்கு மாற ஒப்புக்கொண்டது.
அதையடுத்து மார்ச் 27ஆம் தேதி நடைபெற்ற மதானி பள்ளிவாசலுக்கான நில அகழ்வுப் பணிகளின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் அன்வார் கலந்துகொண்டார். சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு இடையிலான இணக்கத்தால் கோயிலின் இடமாற்றம் அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை பயக்கும் விதத்தில் அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலேசிய இந்துச் சங்கக் கூட்டத்தில், வரிவிலக்கு தொடர்பில் நன்கொடைகளை மின்னியல் முறையில் மலேசிய உள்நாட்டு வருவாய் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கோயில் நிர்வாகக் குழுத் தலைவர்களின் பதவிக்காலத்திற்கு மூன்று ஆண்டுகள் என வரம்பு விதிப்பது தொடர்பான பரிந்துரை குறித்தும் பேசப்பட்டது.

