கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம் சிறப்பு நீதிமன்றம் ஒன்றைத் தொடங்குவது குறித்துப் பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் பாதுகாப்புக் குற்றங்கள் சட்டம் 2012ஐ (சோஸ்மா) மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக சிறப்பு நீதிமன்றத்தைத் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஊழல், சட்டவிரோதக் குடியேறிகள், சிறார் பாலியல் குற்றங்கள், ஆள்கடத்தல், இணையக் குற்றங்கள் போன்ற விவகாரங்களுக்கான சிறப்பு நீதிமன்றங்களைப் போல, பரிந்துரைக்கப்படும் இந்தப் புதிய நீதிமன்றம் இருக்கும் என்று திரு சைஃபுதீன் நசுத்தியன் இஸ்மாயில் குறிப்பிட்டார்.
“சோஸ்மா வழக்குகளுக்கென சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைப்பது குறித்து பரிசீலிக்கவேண்டிய சூழல் தற்போது நிலவுகிறது. அவ்வழக்குகள் நீண்ட காலத்துக்கு நீடிக்காமல் இருக்கவும் அதன் காரணமாக பிணையில் விடுவிப்பது தொடர்பில் சிக்கல்கள் எழாமல் இருக்கவும் இது அவசியம்,” என்று அவர் நாடாளுமன்றத்தில் தமது அமைச்சர்நிலை அறிவிப்பில் குறிப்பிட்டார்.
மேலும், பிணையில் விடுவிக்க முடியாதவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ள குற்றங்கள் போன்றவற்றை அரசாங்கம் மறுஆய்வு செய்யும் என்றும் திரு சைஃபுதீன் கூறினார்.
“இச்சட்டத்தின்கீழ் 73 குற்றங்கள் இடம்பெற்றுள்ளன. வருங்காலத்தில் எந்தக் குற்றங்களுக்குப் பிணை வழங்க முடியாது, எந்தக் குற்றங்களுக்கு அந்த முடிவை நீதிமன்றம்தான் எடுப்பது போன்றவற்றை மறுஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருவோம்.
“தற்போதைய விதிமுறைகளின்படி பெண்கள், 18 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள், முதியோரைத் தவிர வேறு யாருக்கும் பிணை வழங்க முடியாது,” என்று திரு சைஃபுதீன் விளக்கினார்.
சோஸ்மாவின் சட்டப் பிரிவு 30, நீதிமன்ற நடைமுறைகள் நிறைவடையும் வரை சம்பந்தப்பட்டோரைத் தடுப்புக் காவலில் வைப்பது தொடர்பானது. அதையும் அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.