கோலாலம்பூர்: மலேசியாவின் மனித உரிமைகள் ஆணையம், சட்டத்துக்கு முரணாக நடந்துகொள்ளும் பிள்ளைகளுக்கான அதிகாரபூர்வ மாற்றுக் கொள்கையை உருவாக்கும்படி அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆசிரியர் ஒருவரைத் தாக்கியதாக நம்பப்படும் 14 வயது மாணவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதை அடுத்து ஆணையம் அந்தக் கோரிக்கையை முன்வைத்தது.
காஜாங்கில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் உடற்கல்வி வகுப்புக்குச் செல்லாத மாணவரை ஆசிரியர் கண்டித்துள்ளார். அதையடுத்து ஆசிரியரைக் குத்தியதாகவும் மிரட்டியதாகவும் நம்பப்படும் மாணவர் இரண்டு நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
அத்தகைய வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்த மனித உரிமைகள் ஆணையம், பிள்ளைகளுக்கான தண்டனைகள் அவர்களின் மறுவாழ்வுக்கு வழியமைக்கவேண்டும் என்று குறிப்பிட்டது.
“அத்தகைய கொள்கை குற்றத்துக்கான பொறுப்பைத் தட்டிக் கழிப்பதன்று, மாறாக மறுசீரமைப்புக்கும் மறுவாழ்வுக்கும் வழிவகுக்கும் அணுகுமுறை. அது பிள்ளைகளிடையே இன்னும் அதிக பலன்களைத் தந்துள்ளது,” என்று மனித உரிமைகள் ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டது.
சிறிய அல்லது வன்முறையற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் பிள்ளைகளைக் குற்றவியல் நீதிக் கட்டமைப்பிலிருந்து கல்வி, ஆலோசனை, நடத்தை ஆதரவு ஆகிய சமூக அடிப்படையிலான திட்டங்களுக்கு மாற்ற அந்தக் கொள்கை அனுமதிக்கிறது என்று ஆணையம் விளக்கம் அளித்தது.
அண்மையில் நடந்த சம்பவம் பலவற்றை ஆராயத் தூண்டுவதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.
பள்ளிகளில் திறன்மிக்க நடத்தை ஆதரவு கட்டமைப்பு இருக்கிறதா, மாணவர்களுக்குப் போதுமான மனநலச் சேவைகள் கிடைக்கின்றனவா, சச்சரவைக் களைவதற்கான தீர்வுகளைக் கண்டறிய ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகள் உள்ளனவா போன்றவற்றை ஆணையம் சுட்டியது.
தொடர்புடைய செய்திகள்
மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகிய இருதரப்பினரின் நலனுக்கான முழுமையான கட்டமைப்புகளை வலுப்படுத்தும்படி கல்வியமைச்சு, பள்ளி நிர்வாகிகள், துறை சார்ந்த இதர அமைப்புகள் ஆகியவற்றிடம் ஆணையம் கேட்டுக்கொண்டது.
“மலேசியா தண்டனைகளைத் தாண்டி கருணை, சமத்துவம் என பிள்ளைகளுக்கான நியாயத்தை அரவணைக்கவேண்டும்,” என்று ஆணையம் வலியுறுத்தியது.