கோலாலம்பூர்: மலேசியாவின் இந்தியச் சமூகம் புறக்கணிக்கப்படுவதாகச் சிலர் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளதில் உண்மையில்லை என்று அந்நாட்டின் பிரதமர் அன்வார் இப்ராகிம் தமது அரசாங்கத்தைத் தற்காத்துப் பேசியுள்ளார்.
மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவு (மித்ரா) எனும் திட்டம் மட்டும் அல்லாது மலேசிய இந்தியர்களுக்கு ஆதரவு வழங்கவும் அவர்களை வாழ்வில் உயர்த்திவிடவும் பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளதாகத் திரு அன்வார் கூறினார்.
இந்தியர்களுக்கு உதவும் வகையில் பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் அன்வார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
‘சும்பாங்கான் துனாய் ரஹ்மா’ எனும் திட்டம் வாயிலாக மலேசிய இந்தியச் சமூகத்துக்கு இவ்வாண்டு 972 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.
2022ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் ரிங்கிட்டைவிட இது அதிகம் என்றார் அவர்.
“மடானி பொருளியல் கட்டமைப்பு முழுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது எனத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மலேசியத் தீபகற்பம், சாபா, சரவாக்கில் மிக மோசமான வறுமையால் குறிப்பிட்ட சில இனங்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. அனைத்து இனங்களிலும் கடும் ஏழ்மையால் அவதிப்படுவோர் உள்ளனர். அதே போல மலேசிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் இனங்கள் அடிப்படையிலானவை அல்ல. இருப்பினும், அந்தந்த இனங்களுக்கெனப் பல சிறப்புத் திட்டங்களும் உள்ளன.
“மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவு மூலம் மட்டுமே இந்தியர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது என்று சொல்து உண்மையன்று. வேறு பல திட்டங்களும் உள்ளன,” என்று பிரதமர் அன்வார் விவரித்தார்.
மலேசிய இந்தியச் சமூகத்துக்காக 1.2 பில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள வீடமைப்பு கடன் உத்தரவாதத் திட்டத்தையும் தமது அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வருடாந்திர வரவுசெலவுத் திட்டம் மூலம், மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவின்கீழ் சமூகப் பொருளியல் மேம்பாட்டுத் திட்டத்துக்காக நிதி ஒதுக்கப்படுவதாகத் திரு அன்வார் தெரிவித்தார்.
அவ்வாறு ஒதுக்கப்படும் தொகை 100 மில்லியன் ரிங்கிட் என்றார் அவர்.
“இந்தியச் சமூகத்துக்கு நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகச் சிலர் கூறுகின்றனர். இது உண்மையல்ல. 2024ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட்டில் 98.9 மில்லியன் ரிங்கிட் இந்தியர்களுக்காகச் செலவு செய்யப்பட்டது. அதன்மூலம் 122,082 இந்தியர்கள் பலன் அடைந்தனர்,” என்றார் பிரதமர் அன்வார்.
பதிவு செய்யப்பட்டுள்ள 200 இந்து கோயில்களுக்கும் இந்தியர்களின் வழிபாட்டுத் தலங்களாகச் செயல்படும் சமூக நிலையங்களுக்கும் 20 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினர்.
இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளைப் பராமரிக்கவும் சிறிய அளவிலான மேம்பாட்டுப் பணிகளுக்காகவும் ஒருமுறை வழங்கீட்டுத் தொகையாக 10 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
இந்திய வர்த்தகர்களுக்கு உதவும் வகையில் இந்தியச் சமூக தொழில்முனைவர் மேம்பாட்டுத் திட்டமும் நடைமுறையில் உள்ளதை அவர் சுட்டினார்.