மலேசிய இந்தியர்கள் மோசடிக்கு ஆளாவது குறைவு: பினாங்குக் காவல்துறை

மலேசிய இந்தியர்கள் மோசடிக்கு ஆளாவது குறைவு: பினாங்குக் காவல்துறை

2 mins read
அனைத்து இனத்தவரும் சமமாகக் குறிவைக்கப்பட்டாலும், மோசடிக்காரர்கள் சோர்வடைந்துக் கைவிடும்வரை தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருப்பதால், மலேசிய இந்தியர்கள் மிகக் குறைவாகவே பணத்தை இழந்துள்ளனர்.
5426be43-95eb-48e6-91b8-dddd133c0b14
பினாங்கு வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு சேகரித்த தரவுகளின்படி, கடந்த ஆண்டு பினாங்கில் பதிவான 5,090 மோசடி வழக்குகளில் ஏறத்தாழ 7 விழுக்காட்டுக்கும் சற்று அதிகமாக, அதாவது 381 வழக்குகளில் மட்டுமே இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஜார்ஜ்டவுன்: மலேசிய இந்தியர்கள் நிறைய கேள்விகள் கேட்பதால் அவர்கள் மோசடிக்காரர்கள் விரிக்கும் வலையில் விழும் சாத்தியம் மிகக் குறைவாக இருப்பதாகப் பினாங்கு வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மலேசிய இந்தியர்கள் சரமாரியான கேள்விகளைக் கேட்பதால் மோசடிக்காரர்கள் விரக்தியடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

‘ஃபோர்டினெட் மலேசியா’ என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு மட்டும் மலேசியர்கள் இணைய மோசடிகளில் கிட்டத்தட்ட 2.7 பில்லியன் ரிங்கிட் இழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 76 விழுக்காடு அதிகரிப்பாகும். மின்னிலக்கக் கட்டணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகளைத் திசைதிருப்பும் மிகவும் நுட்பமான முறைகளை மோசடிக் கும்பல்கள் கையாள்வதே இதற்குக் காரணமாகும்.

இந்த இழப்புகள் இணைய மோசடி தொடர்பான பதிவுகளின் திடீர் அதிகரிப்போடு தொடர்புடையவை. 2025ஆம் ஆண்டில் மோசடி தொடர்பான 98,500க்கும் மேற்பட்ட பதிவுகள் அகற்றப்பட்டதாக மலேசியாவின் தகவல் தொடர்பு அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இது முந்தைய ஆண்டு அகற்றப்பட்ட 63,652 பதிவுகளைவிட கணிசமான அளவில் அதிகம்.

ஆனால், இந்தியச் சமூகத்தினர் மத்தியில் இந்த இழப்பு குறைவாக இருந்ததாகப் பினாங்கு மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது.

பினாங்கு வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு சேகரித்த தரவுகளின்படி, அனைத்து இனத்தவரும் மோசடிக்காரர்களால் சமமாகக் குறிவைக்கப்பட்டபோதிலும், கடந்த ஆண்டு பினாங்கில் பதிவான 5,090 மோசடி வழக்குகளில் ஏறத்தாழ 7 விழுக்காட்டுக்கும் சற்று அதிகமாக, அதாவது 381 வழக்குகளில் மட்டுமே இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலேசிய இந்தியர்கள் பெரும்பாலும் சரமாரியாகக் கேள்விகள் கேட்பதே இதற்குக் காரணம் என்று பினாங்கு வர்த்தகக் குற்றப் புலனாய்வு துணைத் தலைவர் பாங் மெங் டக் கூறியதாக மலேசிய ஊடகம் தெரிவித்தது.

“உதாரணமாக, ஒரு மோசடிக்காரர் ஒருபோதும் நடக்காத கடத்தல் பற்றி இந்தியர் ஒருவரிடம் கூறி அவரை நம்பவைக்க முயற்சி செய்தால், யார் கடத்தப்பட்டார்கள்? எங்கே? எப்போது? எதற்காக? என்று சம்பந்தப்பட்ட இந்தியர் கேள்விகளை எழுப்புவார்,” என அண்மையில் நடைபெற்ற மோசடித் தடுப்பு குறித்த கருத்தரங்கு ஒன்றில் திரு பாங் கூறினார்.

“மோசடிக்காரர் சோர்வடைந்துக் கைவிட்டுச் செல்லும்வரை கேள்விகள் வந்துகொண்டே இருக்கும்,” என்று திரு பாங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்