கோலாலம்பூர்: விசாரணையிலிருந்து பின்வாங்குவதற்குக் கைமாறாக மலேசிய செய்தியாளர் ஒருவர் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
நீதிமன்றத்தில் அவர் மீது லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர்கள் கடத்தலில் ஒரு கும்பல் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது; அதன் தொடர்பிலான விசாரணையில் பி. நந்த குமார் எனும் செய்தியாளர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இணைய செய்தி ஊடகமான மலேசியாகினியில் (Malaysiakini) செய்தியாளராகப் பணியாற்றும் குமார் 20,000 ரிங்கிட் (6,000 வெள்ளி) லஞ்சம் பெற்றதாக சிலாங்கூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர் கடத்தலில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் கும்பலைப் பற்றிய கட்டுரைகளை இணையத்திலிருந்து அகற்றவும் பதிவேற்றம் செய்யாமல் இருக்கவும் அவர் அந்தத் தொகையை லஞ்சமாகப் பெற்றார் என நம்பப்படுகிறது.
குற்றச்சாட்டை குமார் மறுத்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் குறைந்தது 100,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம். இத்தொகை, அவர் பெற்றதாகக் கூறப்படும் லஞ்சப் பணத்தில் ஐந்து மடங்காகும்.
பிரதமர் அன்வார் இப்ராகிமின் தலைமையில் மலேசியாவில் பத்திரிகை சுதந்திரம் குறித்து கவலை அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் குமாரின் வழக்கு தலைதூக்கியுள்ளது.