தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ள மலேசிய மாமன்னர்

1 mins read
5e3f8dfc-0168-47a1-a31a-028fcd302269
மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர். - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்

கோலாலம்பூர்: மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் மருத்துவ சிகிச்சை பெற வெளிநாடு சென்றுள்ளதாக அவரின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மலேசிய தேசிய ஆகாயப் படைத் தளத்திலிருந்து 66 வயதாகும் மாமன்னர் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) காலை வெளிநாடு புறப்பட்டதாக ஃபேஸ்புக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதற்காக, எங்கு, எவ்வகை சிகிச்சை அவர் பெறுகிறார் ஆகிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

மாமன்னரின் பயணம் குறித்து மலேசிய மன்னர்கள், ஆளுநர்கள், அரசாங்கம் ஆகிய தரப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டுவிட்டதாக தேசிய மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

“மாமன்னர் விரைவில் குணமடையவும் நீண்டகாலத்துக்கு அவரின் உடல்நிலை சீராக இருப்பதற்கும் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவின் தென் துருவத்தில் அமைந்துள்ள ஜோகூர் மாநிலத்தின் மன்னரான சுல்தான் இப்ராகிம், 2024ஆம் ஆண்டு மாமன்னர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

மலேசியாவில் ஆட்சி புரிபவர்களை நிர்ணயிப்பதில் மாமன்னர் பதவி முக்கியமான ஒன்றாக உருவெடுத்து வந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து மலேசியாவில் பிரதமர் பதவியை வகிப்போர் மாறிக்கொண்டே வந்துள்ளது அதற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது.

சுல்தான் இப்ராகிம், 2016ஆம் ஆண்டு சிங்கப்பூரின் கிளெனீகல்ஸ் மருத்துவமனையில் ‘ஏஞ்சியோபிளாஸ்டி’ இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்