கோலாலம்பூர்: மலேசிய மாமன்னர், வெளிநாட்டில் சிகிச்சையை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியுள்ளார்.
சனிக்கிழமை காலை (பிப்ரவரி 22) 7.00 மணியளவில் அரச மலேசிய விமானப் படைத் தளத்தில் சிறப்பு விமானத்திலிருந்து அவர் இறங்கினார் என்று சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட தகவல் தெரிவித்தது.
சுல்தான் இப்ராகிமை இஸ்தானா நெகாராவின் அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டாளர் ஸாய்லானி ஹாஷிம் உட்பட இஸ்தானா அதிகாரிகள் வரவேற்றனர்.
தம்முடைய உடல் நலத்திற்காகப் பிரார்த்தனை செய்த பொதுமக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தசை, எலும்பு வலிக்கு மேற்கொண்ட சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படடுள்ளதாகவும் பதிவு குறிப்பிட்டது.
மாமன்னர் இப்ராகிம் மேற்கொண்ட தீவிர ராணுவப் பயிற்சிகள், அவரின் துடிப்பான வாழ்க்கைமுறை ஆகியவை உடலின் தசைகளையும் எலும்புகளையும் பாதிக்கும் தசை-எலும்பு வலி ஏற்பட்டதற்குக் காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இளம் வயதில் அவர் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்ட போலோ விளையாட்டு, பிரச்சினை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என்று முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.