ஜோகூர்: மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் புதன்கிழமை (மே 6) மாஸ்கோவிற்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.
மே 9ஆம் தேதி ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் வெற்றி விழாவின் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள மலேசிய மாமன்னர் செல்வதாக பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது.
புதன்கிழமை காலை 8 மணிக்கு ஜோகூர், செனாய் அனைத்துலக விமானத் தளத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் அவர் புறப்பட்டுச் சென்றதாக மாமன்னரின் அதிகாரபூர்வ முகநூலில் பதிவிடப்பட்டிருந்தது.
வெற்றி விழாவில் கலந்து கொள்ளும்படி மலேசிய மாமன்னருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சிறப்பு அழைப்பு விடுத்திருப்பது, மலேசியா மீதான ரஷ்ய அரசாங்கத்தின் மிக உயர்ந்த அங்கீகாரத்தைக் காட்டுவதாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாமன்னரின் மகன்கள் இருவரும் அவரை வழியனுப்பி வைத்ததாகக் கூறப்பட்டது.
ஜோகூர் முதல்வர் ஓன் ஹஃபிஸ் காசி, தேசியக் காவல்படைத் தலைவர் முஹமட் காலிட் இஸ்மாயில், புக்கிட் அமான் குற்றத் தடுப்பு, சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் முஹமட் யுஸ்ரி ஹசன் பஸ்ரி உட்பட ஜோகூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் ஆகியோரும் உடனிருந்தனர்.

