ஜோகூர் பாரு: மலேசிய தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயிற்சி பெறுபவர்கள் துன்புறுத்தப்படுவது முடிவுக்கு வராவிடில் அக்கல்விக் கழகத்துக்கும் தமக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படும் என்று அந்நாட்டு மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்தப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறுபவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் அதன் விளைவாக உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் மாமன்னர் கவலையுடன் தெரிவித்தார்.
சிலர் காயமடைந்ததையும் அவர் சுட்டினார்.
இவற்றுக்குப் பல்கலைக்கழகத்தை வழிநடத்தும் ராணுவத் தளபதிகளும் அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்றார் சுல்தான் இப்ராகிம்.
“கடமையைச் செய்யாததற்காகப் பல்கலைக்கழகத்தை வழிநடத்தும் ராணுவ தளபதிகளும் அதிகாரிகளும் பதவி விலக வேண்டும். தங்கள் பிள்ளைகள் ராணுவ அதிகாரிகளாக வேண்டும் என்ற வேட்கையுடன் பெற்றோர் அவர்களை அனுப்பிவைக்கின்றனர், துன்புறுத்தப்படுவதற்காக அல்ல,” என்று பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் சுல்தான் இப்ராகிம் தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழாவில் அந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக அவர் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வு தலைநகர் கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் டிசம்பர் 3ஆம் தேதியன்று நடைபெற்றது.
இதற்கு முன்பு, பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த துன்புறுத்தல்கள் தொடர்பாக வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தும் அவை மீண்டும் நிகழாதிருக்க நடவடிக்கை எடுக்காததற்கு பல்கலைக்கழகத்தை சுல்தான் இப்ராகிம் சாடினார்.
தொடர்புடைய செய்திகள்
“தற்காப்பு, ராணுவக் கல்வி, பாதுகாப்பு சார்ந்த கல்வி ஆகியவற்றைக் கற்பிக்கும் முன்னணி பல்கலைக்கழகமாகத் திகழ்வதே மலேசிய தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகத்தின் இலக்கு. ராணுவக் கட்டுப்பாடு, கலாசாரம் ஆகியவை இப்பல்கலைக்கழகத்தின் முக்கிய கோட்பாடுகள்.
“ராணுவ அதிகாரிகளை உருவாக்க கடுமையான உடற்பயிற்சியும் மனப்பயிற்சியும் அவசியம். ஆனால் இவை மரணம், காயங்கள் ஆகியவற்றை ஒருபோதும் ஏற்படுத்தக்கூடாது,” என்று சுல்தான் இப்ராகிம் வலியுறுத்தினார்.
இளமைப் பருவத்தில் ராணுவப் பயிற்சி பெற்ற மாமன்னர், மலேசிய தேசிய தற்காப்புப் பல்கலைக்கழகத்தில் கொடுமைப்படுத்துதல் கலாசாரம் மனிதாபிமானமற்றது என்று விவரித்தார்.
பயிற்சி அதிகாரி ஒருவரின் விலா எலும்பு முறிவு மற்றும் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டதால், மூத்த மாணவர் ஒருவர் மிதித்ததால், அண்மைய கொடுமைப்படுத்துதல் வழக்கில் நடவடிக்கை எடுக்க முன்னுரிமை அளிக்குமாறு அவர் தற்காப்பு அமைச்சைக் கேட்டுக்கொண்டார்.
19 வயது பயிற்சி அதிகாரியும் மூன்றாமாண்டு மாணவருமான அந்த இளையர் சம்பந்தப்பட்ட அக்டோபர் 21 சம்பவம், தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 325ன் கீழ் விசாரிக்கப்படுகிறது.