பெய்ஜிங்: மலேசிய மன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர், சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடம் கல்லீரல் புற்றுநோயுடன் போராடி 2015ல் இறந்த தனது மகனைப் பற்றி கூறியபோது உணர்ச்சிவசப்பட்டார்.
செப்டம்பர் 19 அன்று தொடங்கிய நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ள சுல்தான் இப்ராகிம், செப்டம்பர் 20ஆம் தேதி மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, திரு ஸியிடம் துங்கு அப்துல் ஜலீல் இஸ்கந்தர் இப்ராகிமைப் பற்றி பேசும்போது கண்ணீர் சிந்தினார்.
2014ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி, சீனாவின் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் உள்ள சன் யாட்-சென் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில், மறைந்த இளவரசருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவியதற்காக சீனாவுக்கு மாமன்னர் நன்றி தெரிவித்தார்.
ஆறு உடன்பிறந்தவர்களில் நான்காவது பிள்ளையான, துங்கு அப்துல் ஜலீல் நான்காம் நிலை கல்லீரல் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்தார்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தபோதிலும், அவர் ஓர் ஆண்டு கழித்து தனது 25வது வயதில் மரணமுற்றார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட திரு ஸியும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியும், தன் மகனைப் பற்றி மாமன்னர் சென்னதைக் கேட்டு மிகவும் கவலையுற்றதாக மலேசியாவின் சீன நாளிதழான சின் நியூ தெரிவித்தது.
“தனது மகனை மிகவும் நேசிக்கும் தந்தையாக சுல்தான் இப்ராகிம் இருந்துள்ளார் என்று அவர்கள் அனைவரும் உணர்ந்தனர்,” என்று மலேசியாவின் வீட்டுவசதி, உள்ளாட்சி அமைச்சர் ஙா கோர் மிங்கை மேற்கோள் காட்டி சின் சியூ கூறியது.
மலேசியப் பேராளர் குழுவில் அங்கம் வகிக்கும் திரு ஙா, சுல்தான் இப்ராகிம், தனது கொள்ளுப் பாட்டி குவாங்டாங்கைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் ஹுவாங் யாஜியாவ் என்றும் திரு ஸியிடம் கூறியதையும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“அப்படி இன்றால் மலேசிய மாமன்னருக்கு சீன வம்சாவளியின் தொடர்பு உள்ளது” என்று திரு ஙா கூறினார்.
இதைக் கேட்ட திரு ஸி, உடனடியாக குவாங்டாங்கிற்குச் சென்று சுல்தான் இப்ராகிமின் குடும்ப வம்சாவளியைக் கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசிய மாமன்னர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் அரசுப் பயணம் இதுவாகும். இது இரு நாடுகளும் தூதரக உறவுகளின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது என்று மலேசியாவின் தேசிய செய்தி நிறுவனமான பெர்மானா கூறியது.
அந்சந்திப்பின் போது, சுல்தான் இப்ராகிம், சீனாவின் முன்னேற்றத்திற்காக அந்நாட்டைப் பாராட்டியதுடன், நாட்டின் வளர்ச்சி அனைவரையும் பிரமிக்க வைப்பதாகவும் கூறினார்.
மேலும் அவர் திரு ஸியை மலேசியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

