தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய மாமன்னர்: நாட்டின் நலனே முக்கியம்

2 mins read
0cb9d50b-1823-439f-94d2-e8fe10c2d9c2
தேசிய ஒற்றுமையை நிலைநாட்டும் முன்மாதிரிகளாக நாடளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என மலேசிய மாமன்னர் இப்ராகிம் இஸ்கந்தர் நினைவூட்டினார். - படம்: பெரித்தா ஹரியான்

கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் சொந்த நலனுக்கு அல்ல என்றும் அந்நாட்டு மாமன்னர் இப்ராகிம் இஸ்கந்தர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் நிலவும் விவகாரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அரசியல் லாபத்துக்குப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 15வது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வின் முதல் கூட்டத்தில் மாமன்னர் இப்ராகிம் உரையாற்றியபோது இதைத் தெரிவித்தார்.

தேசிய ஒற்றுமையை நிலைநாட்டும் முன்மாதிரிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என அவர் நினைவூட்டினார்.

அதைவிட்டுவிட்டு நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்துபவர்களாக இருக்கக்கூடாது என்றார் அவர்.

“கடுமையான வாக்குவாதம், இழிவுப்படுத்துவது, பொய்ச் செய்திகளைப் பரப்புவது ஆகியவற்றுக்கான இடம் நாடாளுமன்றம் அல்ல. நாடாளுமன்றம் என்பது நாட்டு மக்களின் நலன், தேசத்தின் செழுமை ஆகியவை தொடர்பான விவகாரங்களைக் கலந்துரையாடும் புனிதமான தளமாகும்.

“எனவே, அனைத்து விவகாரங்களையும் அரசியலாக்கி கட்சியின் நலனை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு செயல்படும் பழக்கத்தைக் கைவிட்டுவிடுங்கள்,” என்று மாமன்னர் இப்ராகிம் கூறினார்.

பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை பேரளவில் மேம்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மாமன்னர், கடந்த ஆண்டின் நாடாளுமன்ற அமர்வுகளின்போது அவர்கள் மிகுந்த கண்ணியத்துடன் நடந்துகொண்டதாகக் கூறினார்.

“இருப்பினும், பழைய பழக்கத்தைக் கைவிட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிரமப்படுகின்றனர். தவறான நடத்தைகளை நான் பட்டியலிடத் தேவையில்லை. நாடாளுமன்றத்திவ் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தெரியும் என நான் நம்புகிறேன்.

“அரசியல் நிலைத்தன்மையை நிலைநாட்ட அனைத்துத் தலைவர்களும் பங்களிக்கின்றனர், அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துகொள்கிறேன். அவர்கள் நாட்டின் பொருளியலும் சமூகவியலும் மேலோங்கி இருக்க பேரளவில் பங்களித்துள்ளனர்,” என்று மாமன்னர் இப்ராகிம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாமாமன்னர்நாடாளுமன்ற உறுப்பினர்