கோலாலம்பூர்: மலேசியாவின் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், ஆகஸ்ட் 5 முதல் 10ஆம் தேதி வரை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் அழைப்பின் பேரில், மாஸ்கோவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
1967ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே அரசதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, ரஷ்யாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் முதல் மலேசிய அரசத் தலைவராக சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் வரலாறு படைப்பார் என்று தேசிய அரண்மனை ஆகஸ்ட் 2ஆம் தேதி ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
“இந்த வருகை மலேசிய முடியாட்சி, நாட்டின் அரசதந்திரத்தை முன்னெடுப்பதில் அதன் முக்கிய பங்கையும் பிரதிபலிக்கிறது,” என்று அரண்மனையின் அறிக்கை கூறியது.
இந்தப் பயணம், வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும் அது கூறியது.
2025ஆம் ஆண்டின் ஆசியான் தலைவர் என்ற முறையில், உத்திபூர்வ ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் மலேசியா முக்கிய பங்கு வகிக்கும். குறிப்பாக 1996 முதல் ஆசியான் உரையாடல் பங்காளியாக உள்ள ரஷ்யாவின் நிலையை அது உயர்த்தும் என்று அறிக்கை மேலும் கூறியது.
திரு புட்டின் வழங்கும் அரசுபூர்வ விருந்தில் சுல்தான் இப்ராஹிம் கலந்துகொள்வார். மேலும் ஒரு வாகன தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம், டோச்கா கிபெனியா தொழில்நுட்பம் புத்தாக்க மையம் ஆகியவற்றையும் பார்வையிடுவார் என்று அரண்மனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ பயணத்தை முடித்த பிறகு, மாமன்னர் ஆகஸ்ட் 8ஆம் தேதி கசானுக்குப் பயணம் மேற்கொள்வார். அங்கு அவர் ஒரு ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையைப் பார்வையிடுவார்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மே மாதம் மாஸ்கோவிற்கு மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து இந்தப் பயணம் இடம்பெறுகிறது. பிரதமரின் பயணத்தின்போது கல்வி, விவசாயம், உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்தச் சந்திப்பின்போது, மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு தனது நாடு பொறுப்பேற்க வேண்டும் என்று ஐ.நா. விசாரணையில் கூறப்பட்டதை திரு புட்டின் விமர்சித்தார் என்று புளூம்பர்க் செய்தி கூறுகிறது.