புத்ராஜெயா: மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர், கனிமம் அகழ்வுத் திட்டங்களில் விரிவாக்கம் செய்து வரும் ‘சவுதர்ன் அலையன்ஸ் மைனிங்’ என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளார்.
சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இரும்புத் தாது சுரங்க நிறுவனமான சவுதர்ன் அலையன்ஸ் மைனிங்கின் 2.25 விழுக்காட்டுப் பங்குகளை, $6.1 மில்லியன் விலையில் மலேசிய மாமன்னர் வாங்கியுள்ளதாக அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பெக் கொக் சாமிடமிருந்து திங்கட்கிழமை (அக்டோபர் 12) வர்த்தக முடிவு விலையைவிட ஏறத்தாழ 12 விழுக்காடு கூடுதல் விலைக்கு, அதாவது ஒரு பங்கு 42.5 காசு வீதம் இந்தப் பங்குகளை அவர் கையகப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) அதிகாலையில் சிங்கப்பூரில் அந்நிறுவனத்தின் பங்குகள் 10.5 விழுக்காடு உயர்ந்து 42 காசை எட்டின.
மாமன்னர் இப்ராகிமின் சொந்த மாநிலமான ஜோகூரில் மேற்கொள்ளப்படும் திட்டம் உட்பட, கனிமம் சார்ந்த பணிகளில் இந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நிலச் சொத்து, தொலைத்தொடர்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வர்த்தக நலன்களைக் கொண்டுள்ள இவர், மலேசியாவின் சுழற்சி முறை மன்னராட்சி அமைப்பின்கீழ் ஐந்து ஆண்டு காலத்துக்கு மன்னராகப் பொறுப்பேற்றுச் சேவை ஆற்றி வருகிறார்.
கனிமத் தொழில்துறையில் உலக அளவில் முன்னணி நாடாக உருவெடுக்க மலேசிய அரசாங்கம் இலக்கு வைத்துள்ள நிலையில், வெளிநாட்டுச் சுரங்க நிறுவனங்களின் கவனத்தை இது பெரிதும் ஈர்த்து வருகிறது.
