மலேசிய எல்ஆர்டி ரயில் விபத்து சாதாரண சேவைத் தடங்கல் அல்ல: போக்குவரத்து அமைச்சர்

மலேசிய எல்ஆர்டி ரயில் விபத்து சாதாரண சேவைத் தடங்கல் அல்ல: போக்குவரத்து அமைச்சர்

2 mins read
166648ab-0a90-4d8d-a22a-44301cb45a4c
கோலாலம்பூரில் இலகு ரயில் தடம்புரண்ட சம்பவத்தில் ரயிலில் இருந்த 25 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இலகு ரயில் தடம்புரண்ட விபத்து சாதாரணமானது அல்ல என்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்பட அனுமதிக்கமாட்டோம் என்றும் மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறியுள்ளார்.

‘சான் சோவ் லின்’ ‘எல்ஆர்டி’ நிலையத்தில் இந்த விபத்து வியாழக்கிழமை (மே 28) நிகழ்ந்தது.

அதனால், மே 28 அன்று காலை வேலைக்குச் சென்ற பொதுமக்கள் கடும் போக்குவரத்து இடையூறால் பாதிக்கப்பட்டனர். விபத்தின்போது ரயிலில் இருந்த 25 பயணிகளும் எவ்விதக் காயமுமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

அந்த விபத்து குறித்துக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள போக்குவரத்து அமைச்சர், “பொதுமக்கள், ஊழியர்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள இந்த விபத்தை, வழக்கமான தொழில்நுட்பக் கோளாறாகவோ சாதாரண சேவை முடக்கமாகவோ அரசாங்கம் எடுத்துக்கொள்ளாது,” என்று தெரிவித்தார்.

மேலும், பொதுப் போக்குவரத்துச் சேவையை இயக்கும் ரயில் நிறுவனமான ‘பிரசரானா மலேசியா’ அதிகப்பட்ச உத்தேசத் தண்டனைகளை மேற்கொள்ளவும் நிலப் பொதுப் போக்குவரத்து அமைப்புக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

நிறுவனத்தின் உயர்மட்ட மேலாண்மை அதிகாரிகள், இயக்குநர்கள் குழுவினர் தங்களது கடமைகளை அலட்சியமாகக் கையாள முடியாது என்றும், இந்த விபத்திற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் திரு ஆண்டனி கூறினார்.

சிறப்புக் குழு விசாரணை

ரயில் தடம்புரண்டதற்கான காரணத்தைக் கண்டறியப் போக்குவரத்து அமைச்சு உடனடியாக ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. அக்குழுவின் விசாரணை அறிக்கை மிக விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, பொதுமக்களுக்கும் வெளியிடப்படும் என்றார் திரு லோக்.

இந்நிலையில், தண்டவாளத் தடம் மாறும் அமைப்பில் ஏற்பட்ட கோளாறே இந்த விபத்திற்குக் காரணம் என நம்பப்படுவதாகக் முதற்கட்ட அறிக்கைகள் கூறினாலும், விசாரணையில் யாருடைய அலட்சியமாவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்