பிறப்பிலிருந்து 48 ஆண்டுகள் பிரிந்திருந்த மலேசிய ஆடவர் ஒருவர், இதற்கு முன்னர் கண்டிராத அவரது தாயாரைக் காண சுமார் 200 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டிருந்தார்.
700,000க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற டிக்டாக் காணொளி ஒன்று, திரு அஹ்மது சுஃபியான் என்ற அந்த ஆடவர் சிலாங்கூரிலிருந்து ஜோகூருக்கு 200 கிலோமீட்டாருக்கு மேல் பயணம் செய்ததைக் காட்டியது. திரு சுஃபியான், ஜோகூரின் மச்சாப் பகுதியில் உள்ள அவரது தாயாருக்குத் தெரிவிக்காமலேயே அங்கு சென்றிருந்தார்.
தாயாருக்கு மகனை அடையாளம் காண முடியவில்லை. தாயாரிடம் தம் தந்தை திரு ஷாஃபியைத் தெரியுமா என்று திரு சுஃபியான் கேட்டார். ஆனால், 'பியீ' என்ற புனைபெயரை வைத்துதான் தாயாரால் தந்தையை அடையாளம் காணமுடிந்தது.
திரு பியீயுடன் ஒரு மகனைப் பெற்றுக்கொண்டதாகவும் 48 ஆண்டுகளுக்கு முன்னர் பிறப்பிலிருந்தே மகனிடமிருந்து தாம் பிரிந்ததாகவும் தாயார் கூறினார். பின்னர், தாம் பேராக்கிற்கு அனுப்பபட்டதாகவும் அவர் சொன்னார். அப்போதும்கூட, முன்னால் இருக்கும் திரு சுஃபியான்தான் அவருடைய மகன் என்று தாயாருக்குத் தெரியவில்லை.
திரு சுஃபியான் அவரது அடையாள அட்டையை காட்டியபோது மட்டுமே, தாயார் அழத் தொடங்கினார்.
தாயும் மகனும் இணையும் அந்தக் காணொளியில், ஆயிரக்கணக்கானோர் மனம் நெகிழ்ந்துபோய் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

