இந்திய நாட்டவரைத் தாக்கி வழிப்பறி செய்ததாக மலேசிய ஆடவர்மீது குற்றச்சாட்டு

இந்திய நாட்டவரைத் தாக்கி வழிப்பறி செய்ததாக மலேசிய ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
fb252853-db76-4abd-ad17-4c9cd8a4ced7
 முகம்மது சலீம் கபூர் ரஹீம், 40, எனும் இந்த ஆடவர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்தார். - படம்: தி ஸ்டார்
Google News Preferred Icon

ஜார்ஜ்டவுன்: இந்திய நாட்டவரை வழிமறித்துக் காயப்படுத்தி, கொள்ளையடித்த குற்றத்திற்காக வேலை இல்லாத 40 வயது ஆடவர்மீது மலேசியாவின் ஜார்ஜ் டவுன் அமர்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) குற்றஞ்சுமத்தப்பட்டது.

குற்றவியல், போதைப்பொருள் தொடர்பில் குற்றப் பின்னணி கொண்ட முகம்மது சலீம் கபூர் ரஹீம் என்ற அந்த ஆடவர், தன்மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

ஆகஸ்ட் 8ஆம் தேதி பிற்பகல் 4.20 மணியளவில், தாமான் நுசந்தாரா, ஜாலான் மக்லூமில் உள்ள வீடு ஒன்றின் முன்பாக அவர் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

அந்த இந்தியரின் தங்குமிடத்திற்குச் சென்ற முகம்மது சலீம், தம்மைக் காவல்துறை அதிகாரிபோல் காட்டிக்கொண்டு, அவரின் கடப்பிதழைக் காட்டுமாறு சொன்னதாகக் கூறப்படுகிறது.

பின்னர், பூட்டால் அவரைத் தாக்கிய முகம்மது சலீம், அவரது மூக்கிலும் முதுகிலும் காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன்பின் அந்த ஆடவரின் கைப்பேசியைப் பறித்துக்கொண்டு முகம்மது சலீம் தப்பி ஓடியதாகச் சொல்லப்படுகிறது.

அவர் 7,000 ரிங்கிட் பிணைத்தொகையில் விடுவிக்கப்பட்டார். வழக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது,

குற்றமிழைத்தது உறுதிப்படுத்தப்பட்டால், முகம்மது சலீமுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவழிப்பறிஇந்தியர்தாக்குதல்