காரிலிருந்து பறந்து சாலையில் சிதறிய 30,000 ரிங்கிட்

2 mins read
a9f2ef4d-b715-4e8e-a100-2e129acc79b7
சாலையில் சிதறிய பணத்தில் பாதியை மட்டுமே மீட்க முடிந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: காரிலிருந்து 30,000 ரிங்கிட் (S$8,700) பணத்தாள்கள் பறந்து சாலையில் சிதறிய சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது.

முடிதிருத்துநரான வான் இப்ராகிம் வான் லே என்ற ஆடவர் தான் நாலாண்டுகளாகச் சேமித்த பணத்தைத் திரெங்கானு மாநிலம், ஜெர்த்தே நகரிலுள்ள ஒரு வங்கியில் போடுவதற்காகத் தமது காரில் சென்றார்.

ஆனால், 60,000 ரிங்கிட் இருந்த பணப்பையை மறந்தவாக்கில் தமது கார் பின்பகுதியின் மேற்புறத்திலேயே அவர் வைத்துவிட்டார். முதலில் காரின் உட்புறத்தைச் சுத்தம் செய்வதற்காக அவர் அவ்வாறு செய்தார்.

ஆனால், கார்மீது பணப்பையை வைத்ததை மறந்துவிட்டு கம்போங் லாக் லோக்கிலுள்ள தம் வீட்டிலிருந்து இப்ராகிம் தமது ஹோண்டா சிட்டி காரில் ஏறி வங்கிக்குக் கிளம்பினார்.

பத்து நிமிடங்களுக்குப்பின் ஜெர்த்தேவை அடைந்த பின்னரே பணப்பையை காரின் பின்புற மேற்பகுதியிலேயே வைத்துவிட்டதை அவர் உணர்ந்தார். அதனைத் தொடர்ந்து, வந்த வழியிலேயே மீண்டும் திரும்பிச் சென்றார்.

ஆனால், அதற்குள்ளாகவே ஜாலான் கோத்தா பாரு - கோலா திரெங்கானு சாலையில் சிதறிக் கிடந்த பணத்தைச் சிலர் சேகரிக்கத் தொடங்கிவிட்டனர்.

இப்ராகிமால் 30,000 ரிங்கிட் பணத்தை மட்டுமே மீட்க முடிந்தது. எஞ்சிய பணத்தைப் பொறுப்பற்ற சிலர் திருடிக்கொண்டதாகக் கூறி ஆதங்கப்பட்டார் அவருடைய தாயார் சே சஃபியா அப்துல்லா.

இம்மாதம் 13ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவம் அருகிலிருந்த கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புப் படக்கருவியில் காணொளியாகப் பதிவானது.

இச்சம்பவத்தால் மனமுடைந்துபோன 24 வயதான வான் இப்ராகிம் தமது படுக்கையறையைவிட்டு வெளியில் வருவதில்லை என்று கூறி, திருவாட்டி சே சஃபியா வருத்தப்பட்டார்.

“அப்பணத்தைக்கொண்டு என் மகன் ஒரு புது கார் வாங்க விரும்பினான். தன் தந்தையின், வளர்ப்புத் தந்தையின் கடனையும் அவன் அடைக்க நினைத்திருந்தான்,” என்று திருவாட்டி சே சஃபியா சொன்னதாக பெர்னாமா செய்தி தெரிவித்தது.

இதன் தொடர்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பணத்தை எடுத்தவர்கள் அதனைத் திரும்ப ஒப்படைப்பர் என வான் இப்ராகிமின் குடும்பத்தினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்