சிபு (சரவாக்): வயது குறைந்த வளர்ப்பு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மலேசியாவைச் சேர்ந்த 35 வயது ஆடவருக்கு மொத்தம் 104 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், அவருக்கு 18 பிரம்படிகள் கொடுக்கவும் சரவாக் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தம் மீது சுமத்தப்பட்ட ஒன்பது குற்றச்சாட்டுகளை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.
சிபு நகரின் ஜாலான் சலிம் வட்டாரத்திலுள்ள தங்களது வீட்டில் தங்களுக்குப் பாலியல் கொடுமை இழைக்கப்பட்டதாக 15 வயது மற்றும் 16 வயது நிரம்பிய இரு பெண்களும் தங்களது தாயிடம் கூறினர்.
வளர்ப்புத் தந்தையான ஆடவர் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தங்களைப் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் அவர்கள் முறையிட்டனர்.
கடந்த அக்டோபர் 25ஆம் தேதி இது குறித்து புகார் செய்யப்பட்டு, மறுநாள் மாலை 4.25 மணியளவில் ஆடவர் கைது செய்யப்பட்டார்.
குற்றம் செய்ததை உணர்ந்துள்ளேன் என்றும் மீண்டும் அத்தகைய குற்றத்தில் ஈடுபட மாட்டேன் என்றும் அதனால் தமக்குக் கருணை காட்டுமாறும் குற்றவாளி விடுத்த வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்தது.
மாறாக, அவருக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளை நீதிபதி முஸ்யீரி பீட் விதித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பெண்களின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு ஆடவரைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

