கோலாலம்பூர்: மலேசியக் கடல்துறை அமலாக்கப் பிரிவு (எம்எம்இஏ) எனப்படும் அந்நாட்டுக் கரையோரக் காவற்படையின் புதிய பன்னோக்குத் திட்டக் கப்பலின் கட்டுமானப் பணிகள் திட்டமிட்டதைவிட விரைவாக நிறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கப்பல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் மலேசியாவுக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘எம்பிஎம்எஸ்1’ எனும் அக்கப்பல், கட்டுமானப் பணிகள் முடிந்து ஒப்படைக்கப்பட்டதும் மலேசியக் கரையோரக் காவற்படை வரலாற்றில் அதுவே ஆகப் பெரிய கப்பலாகத் திகழும் என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
புதிய கப்பல், நாட்டின் கடற்பகுதிக் கண்காணிப்பு, சட்ட அமலாக்கம், தேடல்-மீட்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் கரையோரக் காவற்படை அதிகாரிகளின் திறனை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.
துருக்கியே நாட்டின் இஸ்தான்புல் நகரிலுள்ள ‘டேசன்’ கப்பல் கட்டுமானத் தளத்தில் இக்கப்பலின் அறிமுக நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மலேசிய அமைச்சர் சைஃபுதின் நசுத்தியோன் கலந்துகொண்டார். துருக்கியே உள்துறை அமைச்சர் முஸ்தஃபா சிஃப்ட்சி, தொழில்-தொழில்நுட்ப அமைச்சர் மெஹ்மத் ஃபாதிஹ் கசிர், அந்நாட்டுக் கடற்படைத் தளபதி ஆகியோருடன் விருந்தினர் ஏறத்தாழ 200 பேர் அதில் கலந்துகொண்டனர்.
மலேசியாவுடனான நெருங்கிய ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையில், மலேசியக் கடல்நீரைக் கொண்ட போத்தலை உடைக்கும் சடங்குடன் கப்பல் அறிமுக விழா தொடங்கப்பட்டது. இஸ்தான்புல்லின் மர்மரா கடலில் இக்கப்பல் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாக, துருக்கியே உள்துறை அமைச்சருடன் சைஃபுதின் நசுத்தியோன் இருதரப்புப் பேச்சில் ஈடுபட்டார். அப்போது பாதுகாப்பு, கடல்சார் தொழில்துறை, தொழில்நுட்பப் பகிர்வு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்குவது குறித்துத் தலைவர்கள் இருவரும் கலந்தாலோசித்தனர்.
