மலேசியப் பொருளியல்துறை அமைச்சர் பதவி விலகல்

2 mins read
620a1994-4e41-4851-95f8-3ed6a15df88e
திரு ரஃபிஸி ராம்லியின் பதவி விலகல் ஜூன் 17ஆம் தேதி நடப்புக்கு வருகிறது. - படம்: பெர்னாமா

ஜோகூர் பாரு: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் பிகேஆர் கட்சியில் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, அமைச்சரவைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக பொருளியல்துறை அமைச்சர் ரஃபிஸி ராம்லி அறிவித்துள்ளார்.

திரு ரஃபிஸியின் அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், தேசிய வளங்கள், சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை துறை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமதும் தமது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்தார்.

திரு ரஃபிஸியின் நட்பாளராகக் கருதப்படும் திரு நிக் நஸ்மி, உட்கட்சித் தேர்தலில் பிகேஆர் உதவித் தலைவர் பதவியைத் தக்கவைக்கத் தவறினார்.

பிகேஆர் கட்சித் துணைத் தலைவராக இருந்த திரு ரஃபிஸி, கடந்த வாரம் நடந்த உட்கட்சித் தேர்தலில் திரு அன்வாரின் மகள் நூருல் இஸாவிடம் அப்பதவியைப் பறிகொடுத்தார். அவரது பதவி விலகல் ஜூன் 17ஆம் தேதி நடப்புக்கு வருகிறது. ஜூன் 16 வரை அவர் விடுப்பில் செல்லவுள்ளார்.

திரு ரஃபிஸியின் 3,866 வாக்குகளுடன் ஒப்புநோக்க, திருவாட்டி நூருல் இஸா 9,803 வாக்குகளைப் பெற்றார்.

திரு ரஃபிஸி புதன்கிழமை (மே 28) வெளியிட்ட அறிக்கையில், “பிரதமரிடம் எனது பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளேன்.

“பிகேஆர் தேர்தலில் என் தோல்வி, அரசாங்கத் திட்டங்களை வகுக்கம் கட்சியில் இனி எனக்கு அதிகாரம் கிடையாது என்பதைக் குறிக்கிறது. ஜனநாயகக் கோட்பாடுகளை நிலைநிறுத்தும் நாடுகளில் நடப்பது போன்று, கட்சித் தேர்தல்களில் தோல்வியுறும் தலைவர்கள், வெற்றிபெற்றவர்களுக்கு அரசாங்கப் பணிகளை ஏற்க வழிவிட வேண்டும்,” என்றார்.

திருவாட்டி நூருல் இஸாவுக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்படுமா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

2022லிருந்து அமைச்சராக இருந்துவரும் திரு ரஃபிஸி, 13வது மலேசியா திட்டத்துடன் தமது இறுதி ஆணை நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“நான் அமைச்சரவையில் இல்லாவிட்டாலும், சில திடமான சீர்திருத்தங்களை அமைச்சரவை கட்டிக்காகும் என நாம் நம்புகிறேன்,” என்றார் அவர்.

இதற்கிடையே, சிலாங்கூர் முதல்வர் அமிருதின் ஷஹ்ரிக்கு அமைச்சரவைப் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்