பெட்டாலிங் ஜெயா: மலேசிய அமைச்சரின் உதவியாளர் ஒருவர் முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுதீனுக்கு எதிராகக் காவல்துறையில் அவதூறு தொடர்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
மலேசிய பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் அஸலினா ஒத்மான் சையத்தின் அரசியல் செயலாளரான திருவாட்டி சுராயா யாக்கோப் அந்தப் புகாரை அளித்துள்ளதாக சினார் ஹரியான் மலாய் நாளிதழ் தெரிவித்து உள்ளது.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு ஆணையில் வீட்டுக்காவல் தொடர்பான ஆவணங்களை அமைச்சர் அஸலினா மறைக்க சதியில் ஈடுபட்டதாக, முன்னாள் சுகாதார அமைச்சரான திரு கைரி கூறியிருந்தார்.
ஆனால், அவரது அந்தக் கருத்து பொய்யானது என்பது மட்டுமல்ல திருவாட்டி அஸலினாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக்கூடியதும் ஆகும் என்று திருவாட்டி சுராயா தமது புகாரில் குறிப்பிட்டு உள்ளார். அந்தப் புகார் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) காவல்துறையிடம் அளிக்கப்பட்டது.
மலேசிய அரசியல் வலையொளி நிகழ்வு ஒன்றில் முன்னாள் அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் ஷாரில் ஹம்தானுடன் இணைந்து பங்கேற்றபோது அமைச்சர் அஸலினாவுக்கு எதிரான கருத்துகளை திரு கைரி தெரிவித்து இருந்தார்.
வீட்டுக்காவல் தொடர்பான பத்திரங்களைப் பெற சட்ட ரீதியான தமது அணுகுமுறைக்கு அனுமதி வேண்டி நஜிப் அளித்த வேண்டுகோளை ஜனவரி 6ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றது.
அந்த வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. வேறொரு நீதிபதி அந்த வழக்கை விசாரிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.