உம்ரா பயணத்தைத் தள்ளிப்போடும்படி மலேசிய முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தல்

உம்ரா பயணத்தைத் தள்ளிப்போடும்படி மலேசிய முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தல்

1 mins read
c734b83e-53fc-4e2a-98f9-9ff2d5ee5399
பாதுகாப்பிற்கு உறுதியில்லாத சூழலில் உயிரைக் காத்துக்கொள்வது முக்கியம் என்பது ஷரியா கொள்கையுடன் இணங்கிப் போவதாகக் கூட்டரசுப் பகுதிகளுக்கான முஃப்தி அகமது ஃபவாஸ் ஃபாசில் தெரிவித்துள்ளார். - படம்: ஃபிரீ மலேசியா டுடே

கோலாலம்பூர்: மேற்கு ஆசியப் பகுதிகளில் நிலவிவரும் பாதுகாப்பற்ற சூழல் சீரடையும்வரை அப்பகுதிகளுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்வதைத் தள்ளிப்போடுமாறு மலேசிய முஸ்லிம்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பாதுகாப்பிற்கு உறுதியில்லாத சூழலில் உயிரைக் காத்துக்கொள்வது முக்கியம் என்பது ஷரியா கொள்கையுடன் ஒத்துப் போவதாகக் கூறி, கூட்டரசுப் பகுதிகளுக்கான முஃப்தி அகமது ஃபவாஸ் ஃபாசில் அறிவுரை வழங்கியுள்ளார்.

அதிகாரிகளால் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் மக்களின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

“புனித பூமியான மெக்காவிற்குப் பயணம் செய்வது பாதுகாப்பானது என்று அதிகாரிகள் கருதினால், முஸ்லிம்கள் வழக்கம்போல உம்ரா அல்லது ஹஜ் பயணத்தைத் தொடரலாம். மாறாக, சூழல் பாதுகாப்பற்றதாக இருந்தால் பயணத்தைத் தள்ளிப்போடுவது என்பது உயிரைப் பாதுகாக்கும் ஷரியா கொள்கைக்கு இணக்கமானதுதான்,” என்று ஓர் அறிக்கை வழியாக முஃப்தி தெரிவித்துள்ளார்.

மலேசியாவிலுள்ள முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்குமாறும் அதிகாரத்துவத் தகவல்களைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, அனைத்துலகப் பாதுகாப்பு நிலவரங்களைக் கண்காணித்து வெளியுறவு அமைச்சு வெளியிடும் பயண ஆலோசனைகளைக் கவனத்தில் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.

முன்னதாக, மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ப் பதற்றத்தால் உம்ரா பயணத் திட்டங்களை மலேசியர்கள் தள்ளிப்போட வேண்டும் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹாசனும் அறிவுரை கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்