கோலாலம்பூர்: திறன்கள், மேம்பட்ட வேலைவாய்ப்புகள் ஆகியவை மக்களுக்கு எளிதில் கிடைப்பதை உறுதிசெய்து அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் விட்டுச்செல்லப்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்; அது மக்களின் வாழ்க்கையில் வெளிப்படுவதன் மூலம் சுதந்திரத்தின் அர்த்தம் பிரதிபலிக்கப்படவேண்டும் என்று மலேசிய துணைப் பிரதமர் அகம்மது ஸாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.
இன்றைய போராட்டம் என்பது சுதந்திரம் பெறுவதைப் பற்றியது அல்ல என்றும் அதன் உண்மையான அர்த்தம் மக்களின் வாழ்க்கையில் தொடர்ந்து உயிர் வாழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“என்னைப் பொறுத்தவரை இன்றைய காலகட்டத்தில் சுதந்திரம் என்பது வருங்காலத்தில் உயரிய சம்பளம் தரும் வேலைகளில் அமர இளையர்களிடையே திறன்களை, குறிப்பாக டிவெட் (TVET) வேலைகளுக்கான திறன்களை வளர்ப்பதாகும்,” என்று அவர் ஃபேஸ்புக்கில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) காணொளிவழி தமது தேசிய தின உரையில் தெரிவித்தார்.
‘சிறு நடவடிக்கைகள்கூட பெரிய பலனளிக்கலாம்’
சுதந்திரமடைந்த பிறகு மலேசியாவின் பயணத்தை நினைவுகூர்ந்த திரு அகம்மது ஸாஹிட், ஒரே ஒரு சாலைகூட ஒரு கிராமத்தை உருமாற்றக்கூடும் என்றும் மின்சாரம் ஒரு சாதாரண வீட்டுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடும் என்றும் ஒரு சிறிய வகுப்பறை பெரிய கனவுகளை வளர்க்க வகைசெய்யக்கூடும் என்றும் சொன்னார்.
மற்றொரு துணைப் பிரதமரான ஃபடில்லா யூசோஃப், நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடிய பிரிவினை, வெறுப்பு, தீவிரவாதம் போன்ற உணர்வுகளுக்குத் தங்களை ஆளாக்கிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுமாறு மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார். சுதந்திரம் என்பது காலனித்துவ ஆட்சியிலிருந்து கிடைத்த விடுதலை மட்டுமல்ல என்றும் அந்த உணர்வு தொடர்ந்து மலேசியர்களிடையே அவர்களின் வாழ்க்கையிலும் தொடர்ந்து இருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நாம் சமயம், கலாசாரம், மொழி, பண்புகள், பின்னணி ஆகியவற்றில் மாறுபட்டிருக்கலாம். ஆனால் நமக்கு ஒரே தாய்நாடு, ஒரே வருங்காலம், ஒரே நம்பிக்கைதான்; அனைவருக்கும் அமைதியான, செழிப்பான, நல்லிணக்கம் கொண்ட மலேசியாவே அதுவாகும்,” என்று திரு ஃபடில்லா மலேசியாவின் 69வது தேசிய தினத்தையொட்டி தெரிவித்தார்.
“சுதந்திரம் என்பது நாம் பெற்றதைப் பற்றியது மட்டுமல்ல, நாம் விட்டுச் செல்லவிருப்பதைப் பற்றியதும் ஆகும்,” என்றார் அவர்.


