மலேசிய தேசிய சேவை 3.0 முன்னோடித் திட்டம் ஜனவரியில் தொடக்கம்

2 mins read
6d00ec83-d715-4a88-bb75-946f137199e0
2025ஆம் ஆண்டு ஜனவரியில் ஏறக்குறைய 500 பேர் தேசிய சேவை முன்னோடித் திட்டத்தில் பயிற்சி பெறுவர். ஜூன் மாதத்தில் அந்த எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடப்படுகிறது. - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: மலேசியாவின் தேசிய சேவைப் பயிற்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டமான ‘பிஎல்கேஎன் 3.0’ முன்கூட்டியே அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அது ஜூன் மாதம் தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது.

2025 ஜனவரியில் முன்னோடித் திட்டம் தொடங்கும். பின்னர் அது படிப்படியாக அமலுக்கு வரும். அதற்காக 50 மில்லியன் ரிங்கிட் (15 மில்லியன் வெள்ளி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மலேசியத் தற்காப்புத் துணை அமைச்சர் அட்லி ஸஹாரி அக்டோபர் 26ஆம் தேதி கூறினார்.

முதற்கட்டமாக ஜனவரி மாதம் ஏறக்குறைய 500 பேர் பயிற்சி மேற்கொள்வர். பின்னர் ஜூன் மாதம் அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார் அவர்.

இத்திட்டத்தின்கீழ் 16 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டோர் பயிற்சி பெறுவர்.

முதற்கட்டப் பயிற்சியாளர்களுக்குக் கோலாலம்பூரிலும் பாகாங்கிலும் உள்ள இரண்டு ராணுவ முகாம்களில் பயிற்சி அளிக்கப்படும்.

பின்னர் 2026ஆம் ஆண்டுக்குள் ‘பிஎல்கேஎன்’ திட்டம் முழுமையாக நடப்புக்கு வந்த பிறகு, மலேசியா முழுவதுமுள்ள 13 முகாம்களுக்கு இப்பயிற்சி விரிவுபடுத்தபப்டும்.

“ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி அடுத்த ஆண்டு மத்தியில் பயிற்சியைத் தொடங்கக் கருதினோம். ஆனால் அதை முன்கூட்டியே நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது,” என்றார் திரு அட்லி.

மலேசியா அதன் தேசிய சேவைப் பயிற்சித் திட்டத்தை 2003ஆம் ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தியது.

இளையர்களிடையே இன ரீதியான பிளவுகள் குறித்த கவலை நிலவியதுடன் தேசப்பற்று இல்லை என்று கருதப்பட்ட நிலையில், மூன்று மாதப் பயிற்சி முகாம் மூலமாக தேசப்பற்றும் குடிமைநல மனப்போக்கும் கொண்ட கூடுதலான இளையர்களை உருவாக்குவது நோக்கம்.

இதற்காக ஆண்கள், பெண்கள் என இருசாராரையும் உள்ளடக்கிய ஏறக்குறைய 85,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதல் பயிற்சித் திட்டம் 2015ஆம் ஆண்டு வரை நடைபெற்றது.

பின்னர் 2016ல் தொடங்கப்பட்ட ‘பிஎல்கேஎன் 2.0’ திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 20,000 பேருக்குப் பயிற்சி வழங்கப்பட்டது.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இத்திட்டம் கைவிடப்பட்டது. அரசாங்கச் செலவுகள் குறைக்கப்பட்டது இதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்