பெட்டாலிங் ஜெயா: மலேசியக் கடற்படைக்குச் சொந்தமான ‘கேடி பென்டேகர்’ கப்பலில் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜோகூர் கரையோரம் அருகே அது முற்றிலுமாக மூழ்கியது.
தஞ்சோங் பென்யுசோப்புக்கு தென்கிழக்கே இரண்டு கடல் மைல் தூரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) பிற்பகல் 3.54 மணிக்கு அக்கப்பல் மூழ்கியதாக மலேசியக் கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சுவீடனில் தயாரிக்கப்பட்ட அக்கப்பல் 1978 நவம்பர் 11ஆம் தேதி கடற்படைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1979 ஜூலை 27ஆம் தேதி அது கடற்படையில் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில், கப்பலை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கடற்படை தெரிவித்தது.
கப்பல் கடலில் முற்றிலுமாக மூழ்குவதற்கு முன்பு அதிலிருந்து 39 ஊழியர்களைப் பாதுகாப்பாக மீட்ட கடற்துறை சமூகத்தைக் கடற்படை பாராட்டியது.
“யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. கப்பல் ஊழியர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர்.
“சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தற்போதைய நிலவரமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் கண்காணிக்கப்பட்டு வருகிறது,” என்று கடற்படை விளக்கியது.