ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் தாதியாகப் பணியாற்றும் 24 வயது மலேசியப் பெண் ஒருவர், இணையக் காதல் மோசடியில் சிக்கி 40,000 ரிங்கிட் (S$12,092) இழந்துள்ளார்.
சமூக ஊடகத் தளமான ‘ரெட்னோட்’ வழி பிப்ரவரி 22ஆம் தேதி சீன நாட்டவர் என நம்பப்படும் ஓர் ஆடவரை அந்தப் பெண் சந்தித்ததாக ஜோகூர் பாரு காவல்துறையின் துணை ஆணையர் ராவுப் செலாமாட் தெரிவித்தார்.
இருப்பினும், சந்தேக நபர் போலி அடையாளத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அறிமுகமாகிக் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையில், இருவரும் ஜோகூர் பாருவில் மார்ச் 1ஆம் தேதி (சனிக்கிழமை) சந்தித்துக்கொள்ள முடிவெடுத்தனர்.
“ஆனால், தனது வேலையிடத்தை விட்டு வெளியேறுவதற்குப் பணம் தேவைப்படுவதாகக் கூறி, தனக்குப் பணம் அனுப்புமாறு பாதிக்கப்பட்ட பெண்ணை அந்த ஆடவர் நம்பவைத்தார்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
அதையடுத்து, இரண்டு வங்கிக் கணக்குகளுக்கும் ஒரு மின்னிலக்கக் கட்டணத் தளத்துக்கும் அந்தப் பெண் மொத்தம் 11 இணையப் பரிவர்த்தனைகளைச் செய்தார்.
பாதிக்கப்பட்ட பெண் இந்தப் பரிவர்த்தனைகளைச் செய்த பின்னும், கூடுதல் பணம் தேவைப்படுவதாக அந்த ஆடவர் முறையிட்டுள்ளார். அப்போதுதான், தாம் ஏமாந்துவிட்டதை உணர்ந்து அந்தப் பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
கணக்குகளைச் சோதனையிட்டதில் ஏற்கெனவே மோசடிகளுடன் தொடர்புடையதாக அவை இல்லை என்றும் கண்டறியப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில் வேலை தொடர்பான மோசடியில் மலேசியப் பெண் ஒருவர் சிக்கி 53,857 ரிங்கிட்டை இழந்தார். இவர் எட்டு வெவ்வேறு உள்ளூர் வங்கிக் கணக்குகளுக்கு ஒன்பது பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை அனுப்பிய பிறகு, தாம் மோசடிக்கு ஆளாகியுள்ளதை உணர்ந்தார்.
குறைந்தது 20 மோசடிச் சம்பவங்களுடன் ஏற்கெனவே அந்த எட்டு வங்கிக் கணக்குகளுக்கு தொடர்பிருந்ததை அதிகாரிகள் பின்னர் கண்டுபிடித்தனர்.