மலேசியா: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவின் தீவிரவாதச் சிந்தாந்த அடிப்படையிலான நடவடிக்கைகளில் உயர்கல்விக் கழக மாணவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பதை மலேசிய உயர்கல்வி அமைச்சு கண்காணிப்பதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிளர்ச்சியாளர்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் அண்மையில் கைதானதை அடுத்து அந்தக் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ஸாம்பிரி அப்துல் காதிர் கூறியதாக பெர்னாமா சொன்னது.
தீவிரவாதச் சித்தாந்தங்கள் பரவுவதைத் தடுக்க காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து நிலைமையை அமைச்சு கண்காணிப்பதாக கோலாலம்பூரில் டாக்டர் ஸாம்பிரி (ஜூலை 13) செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசியாவில் உள்ள பங்ளாதேஷியர்களிடையே சமூக ஊடகம் மூலம் தீவிரவாதச் சித்தாந்தத்தைப் பரப்பி ஐஎஸ் அமைப்புக்காக நிதி திரட்ட முற்பட்ட கட்டமைப்பை அதிகாரிகள் முடக்கியதை ஜூலை 4ஆம் தேதி மலேசியாவின் உயர் காவல்துறை அதிகாரி பகிர்ந்துகொண்டார்.
ஏப்ரலிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் 36 பங்ளாதேஷியர்களை அதிகாரிகள் தடுத்து வைத்ததாகக் காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் முகமது காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் தொழிற்சாலைகளிலோ, கட்டுமானம், சேவை போன்ற துறைகளிலோ வேலை செய்ய மலேசியா சென்றவர்கள்.
தடுத்து வைக்கப்பட்டோரில் ஐவர்மீது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குற்றம் சுமத்தப்பட்டது. 15 பேர் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர். 16 பேர் மீதான விசாரணை தொடர்கிறது.
இன்னும் கூடுதலானோர் பிடிபடலாம் என்று திரு முகமது காலிட் கூறினார். பயங்கரவாதக் கட்டமைப்புடன் ஏறக்குறைய 100லிருந்து 150 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

