கோலாலம்பூர்: மலேசியப் பிரதமராக சிறிது காலம் பதவி வகித்த முகைதீன் யாசின், பெரிக்காத்தான் நேஷனல்(PN) எனப்படும் எதிர்கட்சிக் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பதவி விலகுவதாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) அறிவித்துள்ளார்.
மலேசிய அரசாங்கம் அரசியல் நெருக்கடியை சந்தித்த வேளையில் 2020ஆம் ஆண்டு ‘பிஎன்’ கூட்டணி உருவாக்கப்பட்டது. அப்போது நாட்டின் எட்டாவது பிரதமராக அவர் பதவியேற்றார்.
பதினேழு மாதங்களே அவர் பிரதமராக நீடித்தார். ‘கொவிட்’ பெருந்தொற்றை சரிவர வழிநடத்தவில்லை என்ற காரணத்தால் 2021ஆம் ஆண்டில் அவர் பதவி விலகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
“ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உருவான ‘பிஎன்’ கூட்டணியின் தலைவர்கள் அனைவருக்கும் இதுவரை அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கூட்டணியின் தலைமைக்கும் அதன் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்,”என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
திரு முகைதீன் யாசினின் அறிக்கை வெளிவந்த சில மணிநேரம் கழித்து ஜோகூர் மாநில பிஎன் கூட்டணியின் தலைவர் டாக்டர் சஹ்ருதீன் ஜமால் தனது பதவி விலகலை அறிவித்தார். அவர் ஜோகூர் மாநில முதல்வராக இருந்தவர். திரு முகைதீனின் தலைமையில் 2015ல் உருவான பெர்சத்து கட்சியில் அவர் அங்கம் வகித்தவர்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜோகூரில் ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியிலிருந்து (PH) பெர்சத்து விலகியதால் டாக்டர் சஹ்ருதீன் முதல்வர் பதவியிழந்தார்.
டிசம்பர் மாதம் தொடங்கி, மலேசியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணியில் பதற்றம் நிலவுகிறது. மலாய்-முஸ்லிம் நலன் விரும்பும் ‘பாஸ்’ (PAS) போன்ற கட்சிகள் கூட்டணியில் பெரும்பான்மை வகிக்கின்றன. அவை ஆட்சி செய்யும் பெர்லிஸ் மாநிலத்தில் பெர்சத்துக் கட்சி, ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டி வருகின்றன.
திரு முகைதீன் பெர்சத்துக் கட்சியின் தலைவராக நீடிக்கிறார்.


