கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் வலுவிழந்த கூட்டணியைக் கவிழ்க்கப்போவதாக 2023ஆம் ஆண்டு கூறி தோல்வியுற்ற பெரிகத்தான் நேஷனல் கட்சி 2028ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அடுத்த தேர்தலுக்குள் அடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்தத் தேர்தல் முன்கூட்டியே நடைபெறலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
திரு அன்வார் அவரது ஐந்தாண்டு நாடாளுமன்ற தவணைக் காலத்தின் நடுப்பகுதியை எட்டும் வேளையில் எதிர்க்கட்சி புத்ரஜெயாவை மீண்டும் கைப்பற்ற முற்படுகிறது.
திரு முஹைதீன் யாசின் பெரிகத்தான் நேஷனல் கூட்டணியை வழிநடத்துகிறார். அவரது பெர்சத்து மலேசியா. கட்சி பாஸ் கட்சியுடன் ஒப்புநோக்க குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும்விட பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அளவிலும் மாநில அளவிலும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
இதற்கிடையே, பாஸ் கட்சி செப்டம்பர் மாதம் கடுமையான தலைமைத்துவ போட்டியை எதிர்கொள்ளவிருக்கிறது. ஜூன் 17ஆம் தேதி மருத்துவச் சிகிச்சை மேற்கொண்ட 77 வயது தலைவர் ஹாடி அவாங் ஆன்மிக தலைவர் பொறுப்பை ஏற்கவிருப்பதாக அறியப்படுகிறது.
பெர்சத்து கட்சியிலும் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. துணைத் தலைவர் ஹம்சா சைனுடினுக்கும் தலைமைச் செயலாளர் அஸ்மின் அலிக்கும் இடையே பூசல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
காரசாரமான வாக்குவாதத்திற்குப் பின் அடுத்த தலைவர் யார் என்பதையும் 2024ஆம் ஆண்டிலிருந்து 2027ஆம் ஆண்டு வரைக்குமான கட்சியின் சிறந்த அணி எது என்ற இறுதி முடிவையும் திரு முஹைதீன் அறிவிப்பார் என்று முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹம்சாவைத் தமது துணைத் தலைவராகவும் திரு ஃபைசால் அஸுமுவை அதற்கு அடுத்த நிலைத் தலைவராகவும் திரு முஹைதீன் அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஜூன் 16ஆம் தேதி, “நீடித்த நிலைத்தன்மை, கட்சியின் தொடர்ச்சி ஆகியவற்றை உறுதிசெய்ய சிறந்த அணியை முன்மொழிந்தேன், அதற்கு கிட்டத்தட்ட உயர் மட்டத்தில் உள்ள 30 பெர்சாத்து உறுப்பினர்களிடம் கலந்துரையாடினேன்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் திரு முஹைதீன் சொன்னார்.
இப்போது, அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராகவேண்டிய காலம் என்றும் அதன் முடிவு கட்சியின் அடுத்த தலைமைத்துவம் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் திரு முஹைதீன் குறிப்பிட்டார்.
16வது பொதுத் தேர்தலில் புத்ரஜெயாவில் உள்ள தங்கள் இடத்தை மீண்டும் கைப்பற்றும் வரை தலைவராகத் தமது கடமைகளைத் தொடரவிருப்பதாக 2024 கட்சிக் கூட்டத்தில் திரு முஹைதீன் சூளுரைத்தார்.
கூட்டணியின் தலைவராகத் திரு முஹைதீன் தொடரவேண்டும் என்று பெரிகத்தான் நேஷனல், பாஸ், பாஸ் கட்சித் தலைவர் ஹாடி உள்ளிட்டோர் கடந்த ஆண்டு இறுதியிலும் இவ்வாண்டு தொடக்கத்திலும் குறிப்பிட்டனர்.
தங்களின் பிரதமர் வேட்பாளரும் பெர்சாத்துக் கட்சியிலிருந்துதான் வரவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.