பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் அண்மையில் ஏற்பட்ட ‘கோ-கார்ட்’ விபத்தைத் தொடர்ந்து நாடளவில் அனைத்து வர்த்தக ‘கோ-கார்ட்’ நிலையங்களின் பாதுகாப்புத் தரநிலைகளும் செயல்பாட்டுப் பழக்கங்களும் மறுஆய்வு செய்யப்படவேண்டும் என்று பாதுகாப்பான சமூகத்திற்கான கூட்டணி அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.
இவ்வாண்டு ஜூலை 11ஆம் தேதி, பூச்சோங்கில் தமது நண்பர்களுடன் ‘கோ-கார்ட்’ விளையாட்டில் ஈடுபட்டிருந்த 21 வயது மான்ரோஷன் சிங் ஹுலோன் என்ற இளையருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு அவசர சிகிச்சை செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தியதாகச் சொன்ன ‘கோ-கார்ட்’ நிலைய நிர்வாகம், தமது தரப்பில் எந்தவித கவனக்குறைவும் இல்லை என்று தெரிவித்தது.
பாதுகாப்புத் தரநிலைகள் பின்பற்றப்பட்டன என்றும் விபத்தை அடுத்து விளையாட்டுப் பந்தயங்கள் நிறுத்தப்பட்டன என்றும் அது குறிப்பிட்டது.
இந்நிலையில், பாதுகாப்பான சமூகத்திற்கான கூட்டணி அமைப்பின் தலைவர் லீ லாம் தாய், ‘கோ-கார்ட்’ என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாக இருந்தாலும் வேகத்தையும் இயந்திரங்களையும் அது உள்ளடக்கியிருக்கிறது என்றார்.
“பாதுகாப்பு என்பது ‘கோ-கார்ட்’ ஓட்டுநர்களும் நிறுவனங்களும் பகிர்ந்துகொள்ளும் பொறுப்பு,” என்ற அவர், ‘கோ-கார்ட்’ ஓட்டுநர்கள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றார்.
அதேவேளை, ஒட்டுமொத்த ‘கோ-கார்ட்’ இடமும் பாதுகாப்பாக இருப்பதை நிறுவன நிர்வாகிகள் உறுதிசெய்வது அவர்களின் கடமை என்று திரு லீ வலியுறுத்தினார்.
‘கோ-கார்ட்’ விளையாட்டுக்குமுன் பாதுகாப்பு குறித்த கட்டாய அறிவுரை, சரியாகப் பொருந்தக்கூடிய தலைக்கவசங்கள் உள்ளிட்டவற்றைச் சரிபார்ப்பது, தெளிவான வேகக் கட்டுப்பாட்டு வரம்புகள் போன்ற நடைமுறைகளைத் திரு லீ பரிந்துரைத்தார்.
தங்களுக்கு நடப்பவற்றுக்குத் தாங்கள்தான் பொறுப்பு என்று வாடிக்கையாளர்கள் கையெழுத்திடுவதால் முறையான பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிசெய்ய நிர்வாகிகள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
