தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கருணை மனுக்கள் மன்னிப்பு வாரியத்திடம் தரப்பட வேண்டும்: மலேசிய அரண்மனை

2 mins read
88b25fc0-292c-436f-b0eb-ecf9ae2fedba
முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு திங்கட்கிழமை (ஜனவரி 6) விசாரணைக்கு வருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: கருணை கோரும் எந்தவொரு சிறைக் கைதியும் மாமன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியத்திடம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மலேசியாவின் அரச அரண்மனை தெரிவித்து உள்ளது.

முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், ஊழல் மற்றும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான 1எம்டிபி முறைகேடு காரணமாக ஆறாண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

முன்னதாக, அவருக்கு விதிக்கப்பட்டு இருந்த 12 ஆண்டு சிறைத் தண்டனை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாதியாகக் குறைக்கப்பட்டது.

அதன் பின்னர், சிறைக் காவலை வீட்டுக் காவல் மூலம் கழிக்க அனுமதிக்க மாமன்னர் வழங்கிய அனுமதியை உறுதி செய்து அதனை செயல்படுத்துமாறு நீதிமன்றத்தை அவர் நாடினார்.

ஆனால், அவரது கோரிக்கையை கீழ் நீதிமன்றம் ஒன்று கடந்த ஜூலை மாதம் தள்ளுபடி செய்துவிட்டது.

அதனை எதிர்த்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு திங்கட்கிழமை (ஜனவரி 6) விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், அரச அரண்மனை வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், சிறைக் கைதிகளின் தண்டனையை ரத்து செய்ய, குறைக்க அல்லது மன்னிப்பு வழங்க மாமன்னருக்கே தனி அதிகாரம் உண்டு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எனவே, மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு கோரும் சிறைக் கைதிகள் அதற்கான விண்ணப்பத்தை மாமன்னர் தலைமையில் இயங்கும் மன்னிப்பு வாரியத்திடம் அளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலேசியாவின் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமும் இதேபோன்ற தகவல் அடங்கிய அறிக்கையை டிசம்பர் 28ஆம் தேதி வெளியிட்டது.

மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனைக்கு ஏற்ப மாமன்னர் முடிவெடுக்கலாம் என்றும் அந்த முடிவை நீதிமன்றத்தால் மாற்ற இயலாது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

வெள்ளிக்கிழமை அரச அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் எந்தவொரு கைதியின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்