கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றக் கட்டடம் முழுவதும் இப்போது சூரிய மின்னாற்றலால் இயங்குகிறது.
இதன்மூலம் ஆண்டிற்கு ஒரு மில்லியன் ரிங்கிட்டை (S$301,800) மலேசிய அரசாங்கம் சேமிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
சூரிய மின்னாற்றலைப் பயன்படுத்துவது, நிகர அளவில் கரிம வெளியீடற்ற நாடாக மாற முனையும் மலேசியாவின் கடப்பாட்டிற்கும் துணைபுரியும் என்று நாடாளுமன்ற நாயகர் ஜொகாரி அப்துல் கனி தெரிவித்துள்ளார்.
“புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மசோதாவை நிறைவேற்றிவிட்டோம். இவ்வாண்டு அக்டோபர் 1 முதல் நாடாளுமன்றம் முழுமையாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அதாவது சூரிய மின்னாற்றல் மூலம் இயங்குகிறது,” என்று அவர் சொன்னார்.
நாடாளுமன்றக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) மூன்றாவது மலேசிய நாடாளுமன்றக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தபிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது திரு ஜொகாரி இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்றக் கட்டடச் செயல்பாடுகளுக்குச் சூரிய மின்னாற்றலைப் பயன்படுத்தும் திட்டங்கள் குறித்து கடந்த 2023 நவம்பரில் அவர் அறிவித்திருந்தார்.
2025ஆம் ஆண்டிற்கான மலேசிய அரசாங்கத்தின் கரிம இலக்குகளை ஒட்டி, நீடித்த நிலைத்தன்மை தொடர்பில் நாடாளுமன்றம் கொண்டுள்ள கடப்பாட்டின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.