புத்ராஜெயா: உலகத் தரவரிசையில் மலேசியக் கடப்பிதழ் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது, நாட்டின் பாதுகாப்பு, நிலைத்தன்மை, அமைப்புகளின் நம்பகத்தன்மைக்குக் கிடைத்த அனைத்துலக அங்கீகாரம் என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
‘கடப்பிதழ் குறியீடு 2026’ என்ற அனைத்துலகத் தரவரிசையில், மலேசியக் கடப்பிதழ் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி 2025ன் மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
முதலிடத்தில் உள்ள ஐக்கிய அரபுச் சிற்றரசுக்கு அடுத்தபடியாக, சிங்கப்பூருடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துகொள்ளும் மலேசியக் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள், உலகின் 175 இடங்களுக்கு விசா இல்லாமலோ வருகை விசா (on-arrival visa) மூலமாகவோ பயணம் செய்ய முடியும்.
இந்த முன்னேற்றம் மலேசியர்களுக்கு அனைத்துலகப் பயணங்களை எளிதாக்குவதுடன், கல்வி, தொழில், வணிகம், முதலீட்டுத் துறைகளில் புதிய வாய்ப்புகளையும் திறந்துவிட்டுள்ளதாக திரு சைஃபுதீன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) பதிவிட்டுள்ளார்.
மலேசியக் கடப்பிதழின் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் அனைத்துலக அளவில் தொடர்ந்து நிலைநிறுத்த உள்துறை அமைச்சும் குடிநுழைவுத் துறையும் இணைந்து பாடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். மலேசியக் குடிமக்களுக்கான சேவைத் தரத்தையும் செயல்திறனையும் மேலும் உயர்த்த இந்தச் சாதனை ஊக்குவிப்பாக அமையும் என்றார் அவர்.
