குவாந்தான்: மலேசியாவின் பாகாங் மாநிலம், குவாந்தான் நகரில் ஜூலையில் நடைபெற்ற இசைக் கச்சேரியின்போது புகழ்பெற்ற மேள வாத்தியக் கலைஞர் ராஜா அஸ்ரின் ராஜா தாலிப், 56, மேடையில் திடீரென மயங்கி விழுந்து காலமானார்.
கடந்த ஜூலை 18ஆம் தேதி ‘மெடிடாசி’ இசைக்குழுவினருடன் இணைந்து அவர் மேடையில் கச்சேரியை நடத்திக்கொண்டிருந்தார். கச்சேரியின் இரண்டாம் பாடலின்போது அவர் எதிர்பாராதவிதமாக மேடையில் சுருண்டு விழுந்தார். இதைக் கண்டு அங்கிருந்த ரசிகர்கள், குழுவினர் அனைவரும் பேரதிர்ச்சியும் பீதியும் அடைந்தனர்.
உடனடியாக மேடையின் பின்புறத்துக்குத் தூக்கிச் செல்லப்பட்ட அஸ்ரின், மருத்துவ அவசர வாகனம் மூலம் தெங்கு அம்பவான் அஃப்சான் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்குச் செயற்கை சுவாச உதவி அளிக்கப்பட்டபோதிலும், அவர் மயக்கம் தெளிந்துகொள்ளவில்லை. அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அஸ்ரினுக்கு ஏற்கெனவே நீரிழிவு இருந்ததாகவும் இதய நோய் தொடர்பான பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவருடைய சகோதரர் ராஜா அஸ்மான் தெரிவித்தார்.
இத்துயரமான சூழலிலும் மறைந்த அஸ்ரினின் நினைவைப் போற்றும் வகையில் தொடர்ந்து இசைப் பயணத்தை மேற்கொள்ளப்போவதாக ‘மெடிடாசி’ இசைக்குழுவினர் உறுதிபூண்டுள்ளனர்.


