சிபா: ஜப்பான் தலைநகர் தோக்கியோ அருகே உள்ள நரிட்டா அனைத்துலக விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் புறப்படவிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்89, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பயணத்தை திடீரென ரத்து செய்தது.
விமானத்தின் இயந்திரங்களில் ஒன்றில் பழுது ஏற்பட்டதாக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியது.
விமானத்தில் இருந்த 160 பயணிகளும் ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக அது தெரிவித்தது.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) காலை உள்ளூர் நேரப்படி 10.40 மணியளவில் விமானம் ஓடுபாதையில் நகர்ந்து கொண்டிருந்தபோது, அதிலிருந்து கரும்புகை வெளியேறியதைத் தொடர்ந்து, உடனடியாகத் தரைக்கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளின் எச்சரிக்கையால் விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தின் ‘ஏ’ ஓடுபாதை உடனடியாக மூடப்பட்டது.
சம்பவ இடத்தைச் சூழ்ந்த தீயணைப்பு வாகனங்கள், அவசர சிகிச்சை ஊர்திகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டன. விமானக் கோளாற்றுக்கான காரணம் குறித்து ஜப்பான் போக்குவரத்து அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.
“தேவைப்படுவோருக்கு உணவு, ஹோட்டல் தங்குமிடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்றுப் பயண ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன,” என்று மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட பயணிகள் கோலாலம்பூருக்குச் செல்லும் அடுத்தடுத்த விமானங்களில் அனுப்பப்படுவர் என்று அது குறிப்பிட்டது.


