மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அனைத்துலக மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக புதன்கிழமை (செப்டம்பர் 13) சிங்கப்பூர் வருகிறார்.
இங்கு இருக்கும்போது அன்வாருக்கும் அவரது துணைவியார் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலுக்கும் பிரதமர் லீ சியன் லூங்கும் அவரது துணைவியார் திருவாட்டி ஹோ சிங்கும் தேநீர் விருந்தளித்து உபசரிப்பர்.
மலேசியாவின் நிதி அமைச்சருமான திரு அன்வார் ‘மில்கன் கழக ஆசிய மாநாடு 2023’இல் பேசுவார் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது.
அந்த மூன்று நாள் மாநாட்டில் சிங்கப்பூரின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர், அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜீனா ராய்மோண்டோ உள்ளிட்டோரும் பேசுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மில்கன் கழகம், அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான பாதையில் முன்னேற்றத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் லாப நோக்கமில்லா அமைப்பாகும்.
நிதி, உடல், மன, சுற்றுச்சூழல் நலத்தில் முக்கியக் கவனம் செலுத்தும் அந்த அமைப்பு, உலகின் ஆக முக்கியமான விவகாரங்களைக் கையாள்வதற்கான வரைவுத்திட்டங்களை உருவாக்க, மிகச் சிறந்த சிந்தனைகளையும் புத்தாக்கமிக்க வளங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
திரு அன்வார் கடந்த நவம்பர் 24ஆம் தேதி மலேசியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு சிங்கப்பூருக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இது.

