டெஸ்லா முதலீடு குறித்து எலான் மஸ்க்குடன் மலேசியா பேச்சு

டெஸ்லா முதலீடு குறித்து எலான் மஸ்க்குடன் மலேசியா பேச்சு

1 mins read
f0459bfd-dd4a-4841-b74d-157429da9667
திரு எலான் மஸ்க்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் துணைக்கோள் தொடர்புச் சேவையான ஸ்டார்லிங்க் குறித்தும் கலந்துபேசினர். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் டெஸ்லா நிறுவனம் செய்யும் முதலீடு குறித்தும், ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் துணைக்கோள் தொடர்புச் சேவை பற்றியும் செல்வந்தர் எலான் மஸ்க்குடன் தொலைபேசியில் கலந்துபேசியதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.

மலேசியாவில் முதலீடு செய்ய நிறுவனம் எடுத்த முடிவையும், திரு எலான் மஸ்க் மலேசியாவிற்கு வருவதற்கான விருப்பத்தையும் தாம் வரவேற்பதாகத் திரு அன்வார் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

நாட்டில் மின்வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான டெஸ்லாவின் விண்ணப்பத்தை மலேசியா இவ்வாண்டின் தொடக்கத்தில் ஏற்றுக்கொண்டது.

டெஸ்லா நிறுவனம் மலேசியாவில் அலுவலகம், காட்சிக்கூடங்கள், சேவை நிலையங்கள் ஆகியவற்றைத் திறந்து, அதன் கார்களுக்கென மின்னூட்டு நிலையக் கட்டமைப்பை அமைக்கும் என்று அந்நாட்டின் வர்த்தக அமைச்சு கூறியிருந்தது.

மலேசியாவில் டெஸ்லாவின் செயல்பாடுகள் இவ்வாண்டு தொடங்கும் என்று கூறிய திரு அன்வார், அதன் தலைமையக அலுவலகம் சிலாங்கூரில் நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், திரு மஸ்க் தொடங்கிவைத்த துணைக்கோள் தொடர்புச் சேவையான ஸ்டார்லிங்க் குறித்தும் தாங்கள் பேசியதாக மலேசியப் பிரதமர் தெரிவித்தார். இதன் மூலம் கல்வி, வேளாண் தொழில்நுட்பத் துறைகளில் மலேசியர்களின் நலன் மேம்படும் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்