கோலாலம்பூர்: மியன்மாரில் மனிதாபிமான நெருக்கடி தொடர்ந்து மோசமாகி வருகையில் ஆசியான் வட்டாரம் கண்டும் காணாமலும் இருப்பது வெட்கக் கேடு என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்திற்கு அவசரப் பொறுப்பு ஏற்கும்படி வட்டாரத்தினரிடம் கேட்டுக்கொண்ட திரு அன்வார், இந்தப் பிரச்சினையை முடிப்பதில் உறுப்பு நாடுகள் ஒற்றுமையுடன் நிலைபாட்டை எடுக்கும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
வட்டாரத்தை நிலைகுலையச் செய்து பெரும் மனிதத் துன்பத்தை இந்தப் பூசல் தொடர்ந்து விளைவிப்பதாகக் கோலாலம்பூர் நகரில் 38ஆவது முறையாக வியாழக்கிழமையன்று நடைபெற்ற ஆசிய பசிபிக் வட்டமேசைக் கலந்துரையாடலின்போது கூறினார்.
“அதனால் நாம் குரல்கொடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆசியான் இதனைத் தன் பொறுப்பாகக் கருதவில்லை என்றால் அது எனக்கு வெட்கக் கேடு,” என்று திரு அன்வார் வன்மையாகக் கூறினார்.
“ஐரோப்பா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியை நாங்கள் நிச்சயம் வரவேற்போம். அவர்கள் வந்து உதவலாம். ஆனால் இது ஆசியானின் பொறுப்பு,” என்று அவர் கூறினார்.
மியன்மாரின் பூசல், அந்நாட்டின் எல்லைகளைக் கடந்துவிட்டதாகவும் அன்வார் கூறினார். மியன்மாருக்கு அருகிலுள்ள தாய்லாந்திலும் மலேசியாவிலும் மொத்தம் ஏறத்தாழ 200,000 அகதிகள் அடைக்கலம் நாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மியன்மாரின் ராணுவச் சார்புடைய தலைவர்களிடத்திலும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதிக்கும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தினரிடத்திலும் ஆசியானின் அமைதிக்கான திட்டங்களை நேரடியாகச் சமர்ப்பித்திருப்பதாகத் திரு அன்வார் தெரிவித்தார்.
ஆசியானின் வெளியுறவு அமைச்சுகள், புலனாய்வு அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டுவருவதாகத் திரு அன்வார் குறிப்பிட்டார். ஆயினும், மியன்மார் மக்களை, குறிப்பாக இளையர்களைப் பாதுகாக்க நல்லறிவு நிலவவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
மியன்மாரில் அண்மையில் நடந்த நிலநடுக்கத்திற்கு ஆசியான் அமைப்பு எடுத்த நடவடிக்கையின் துரிதம், வட்டாரத்தின் மனிதாபிமான கொள்கைகள் மீது கொண்டுள்ள அதன் கடப்பாட்டைக் காட்டுகிறது.
நிலநடுக்கத்தின் தொடர்பில் மலேசியா, சிறப்புப் பேரிடர் உதவி, மீட்புக் குழுவை அனுப்பியதை அவர் சுட்டினார். இவ்வாறு உதவுவதற்கு ஆசியான் நாடுகள் தயாராக இருந்தபோதும் சண்டை நிறுத்தத்திற்கும் எல்லாத் தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் கலந்துரையாடலுக்கான தன் கோரிக்கையிலிருந்து அந்த அமைப்பு பின்வாங்கப்போவதில்லை என்று திரு அன்வார் உறுதியளித்தார்.