சீன உறவால் அமெரிக்க வர்த்தகப் பேச்சு பாதிக்காது: மலேசியப் பிரதமர்

1 mins read
69a5b8bc-7986-4c1e-af9d-c5012c8a5373
மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏப்ரல் மாதம் 31 உடன்பாடுகளில் கையெழுத்திடப்பட்டன.  - கோப்புப் படம்: ஊடகம்

புத்ராஜெயா: சீனாவுடன் உறவு வைத்திருப்பதால் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சில் மலேசியாவுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவின் வர்த்தகப் போட்டியாளரான சீனாவுடன் உறவுகளைப் பலப்படுத்துவதில் மலேசியா கவனம் செலுத்தி வருகிறது.

ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் மலேசியாவுக்கு அதிகாரத்துவ வருகை புரிந்த சீன அதிபர் ஸி ஜின்பிங்கை நேரில் சந்தித்து வாயாரப் புகழ்ந்தார் திரு அன்வார்.

மேலும், மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் அப்போது 31 உடன்பாடுகளில் கையெழுத்திடப்பட்டன.

புதிய வரி உயர்வு தொடர்பாக அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதிகளுடன் மலேசியா பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்னர் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

இந்நிலையில், சீன அதிபருடனான சந்திப்பு குறித்து புதன்கிழமை (மே 21) பின்னேரம் நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயாவில் திரு அன்வார் பேசினார்.

“அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தொடக்க இருந்த நிலையில் அதிபர் ஸி ஜின்பிங்கை நாம் வரவேற்றோம். அதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

“அமெரிக்காவுடனான எந்தவொரு சச்சரவு குறித்தும் அவர் பேசவில்லை என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்,” என்றார் திரு அன்வார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 24 விழுக்காடு வரி விதித்துள்ளார். அதனை முற்றாக ரத்து செய்வது குறித்து அமெரிக்காவிடம் மலேசியா பேசி வருகிறது.

குறிப்புச் சொற்கள்