கோலாலம்பூர்: மலேசிய ஆடவர் ஒருவர் காவல் நிலையத்திற்குள் சென்று காவல்துறை அதிகாரி போல் நடித்தார்.ஆனால், நகைச்சுவைக்காக அவர் செய்த அச்செயல் அவருக்கே வினையாக மாறியது.
காவல்துறை அதிகாரியைக் கைது செய்யப்போவதாக நடித்த அவர், பின்னர் சில நிமிடங்களில் உண்மையான காவல்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
சரவாக் மாநிலத் தலைநகர் தாப்பா நகரில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 19) இச்சம்பவம் நிகழ்ந்தது.
36 வயதான அந்த ஆடவர், தாம் கோலாலம்பூரில் இருந்து வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவரைக் கைதுசெய்யப்போவதாகவும் மிரட்டினார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆடவர் அதிகாரிகளுக்கு 'கேக்' கொடுத்து, வேடிக்கைக்காக தாம் அவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறினார்.
ஆனால், அதிகாரிகள் ஆடவர் செய்தது குற்றம் எனக் கூறி, அங்கேயே அவரைக் கைதுசெய்தனர்.
இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


