மலாக்காவில் போதைப்பொருள் தயாரிப்புக்கூடத்தை முடக்கிய மலேசியக் காவல்துறை

மலாக்காவில் போதைப்பொருள் தயாரிப்புக்கூடத்தை முடக்கிய மலேசியக் காவல்துறை

2 mins read
2d39f96b-8049-416b-b0d3-df441b837006
கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், 23 முதல் 55 வயதுக்குட்பட்ட நான்கு மலேசிய ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் உசைன் உமர் கான் தெரிவித்தார். - படம்: எஸ்பிஎச் மீடியா

மலாக்கா: மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் நடத்தப்பட்ட மூன்று சோதனைகளைத் தொடர்ந்து, எம்டிஎம்ஏ வகை போதைப்பொருளைத் தயாரிப்பதிலும் சேமிப்பதிலும் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு கும்பலை அந்நாட்டுக் காவல்துறையினர் முறியடித்துள்ளனர். அவர்களிடமிருந்து ஏறத்தாழ 86.78 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கையில், 23 முதல் 55 வயதுக்குட்பட்ட நான்கு மலேசிய ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் உசைன் உமர் கான் தெரிவித்தார்.

புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மார்ச் 6ஆம் தேதியன்று பெர்தாம் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து 1.73 கிலோ எரிமின் 5 மாத்திரைகள், 13 கைப்பேசிகள், ஏழு குறிப்பேடுகள் மற்றும் ஒரு மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மார்ச் 8ஆம் தேதியன்று கெனாங்கா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து திரவ மற்றும் தூள் வடிவிலான எம்டிஎம்ஏ, எக்ஸ்டசி மாத்திரைகள், கெட்டமின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அதே நாளன்று குருபோங் பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பேரளவிலான போதைப்பொருள் திரவங்கள் மற்றும் தூள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், போதைப்பொருள்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

குறிப்புச் சொற்கள்