கோலாலம்பூர்: போதைப்பொருள் கடத்தல் கும்பலை மலேசியக் காவல்துறை முறியடித்துள்ளது.
ஜோகூர் பாருவிலும் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் கிட்டத்தட்ட பத்து இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதை அடுத்து, கும்பல் முடக்கப்பட்டது.
இந்தக் கும்பலுக்கு 38 வயது அரசாங்க ஊழியர் ஒருவர் மூளையாகச் செயல்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவரையும் சேர்த்து மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை மலேசியக் காவல்துறையினர் செப்டம்பர் 5, 6ஆம் தேதிகளில் கைது செய்தனர்.
செராஸ், காஜாங், ஜோகூர் பாரு ஆகிய இடங்களில் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன.
தாமான் புக்கிட் செராஸ் பகுதியில் இரு மலேசிய ஆடவர்கள், தாய்லாந்து ஆடவர் ஒருவர், தாய்லாந்துப் பெண் ஒருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர் கோ கோக் சின் தெரிவித்தார்.
கும்பலின் தலைவனாக இருந்த அரசாங்க ஊழியர் காஜாங்கில் பிடிப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஜோகூர் பாருவில் ஓர் ஆணும் பெண்ணும் சிக்கினர்.
கைது செய்யப்பட்டோர் 27 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
ஏறத்தாழ 2 மில்லியன் ரிங்கிட் ($600,000) மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட 30,000 போதைப்புழங்கிகள் பயன்படுத்தக்கூடிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் திரு கோ கூறினார்.
இரண்டு கார்கள், நகைகள், 68,046 ரிங்கிட் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டோரில் நால்வர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.
ஏழு பேர் ஏற்கெனவே சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள்.
கும்பலைச் சேர்ந்த மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக திரு கோ தெரிவித்தார்.

