பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் ஜோகூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வாக்காளர்களின் மனநிலையை அறிவதற்கும் பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் அரசியல் கட்சிகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளன.
குறிப்பாக, இளம் வாக்காளர்களைக் கவரும் நோக்கில் பகுப்பாய்வு, மின்னிலக்கப் பிரசார உத்திகளுக்குச் செயற்கை நுண்ணறிவு முக்கியக் கருவியாக உருவெடுத்துள்ளதாகத் தேசிய முன்னணி கூட்டணியில் அங்கம் வகிக்கும் மலேசிய சீனர் சங்கம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பட்டியல்கள், உறுப்பினர் தரவுகள் மற்றும் முந்தைய கருத்துக்கணிப்புகள் போன்ற வெவ்வேறான தகவல்களை செயற்கை நுண்ணறிவுத் தளங்களில் பதிவேற்றி, அதன் மூலம் மக்களின் தற்போதைய மனப்போக்கையும் அவர்கள் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சினைகளையும் கட்சிகள் மிக வேகமாகக் கண்டறிந்து செயல்பட்டு வருகின்றன.
அதேபோல படங்கள், சுவரொட்டிகள், பாடல்கள், அனிமேஷன், விளக்கக் காணொளிகள் ஆகியவற்றை மிக விரைவாக உருவாக்கவும் எதிர்த்தரப்பினரின் போலியான வாதங்களை முறியடிக்கவும் செயற்கை நுண்ணறிவு உதவுவதாக அம்னோ இளையர் அணி குறிப்பிட்டுள்ளது.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் கெஅடிலான் கட்சி ஒருபடி மேலே சென்று, தனது எதிர்காலத் தேர்தல்களுக்காக ‘தெராஸ்’ எனும் சிறப்பு மின்னிலக்கப் பிரசார முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தைப் பிரதமர் அன்வாரின் மகளும் கட்சியின் துணைத் தலைவருமான நூருல் இஸா தலைமைதாங்குவதாக கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம் தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரங்களை நவீனப்படுத்துவதற்கும் வாக்காளர்களிடம் சென்றடையும் ஆற்றலை வலுப்படுத்துவதற்கும் இம்முறை கையாளப்படுவதாக அவர் கூறினார்.
மலேசிய இளையர்கள் மத்தியில் ஜனநாயக உணர்வை வலுப்படுத்த அமைக்கப்பட்ட ‘உண்டி18’ அமைப்பும் தானியங்கி வாக்காளர் பதிவு முறையும் இளம் வாக்காளர்களின் செல்வாக்கை அதிகரித்துள்ளதாக சிலாங்கூர் மாநிலத்தின் ஜனநாயகச் செயல் கட்சித் தலைவர் இங் சீ ஹான் தெரிவித்தார்.
எனவே, ஜனநாயகச் செயல் கட்சி தனது மின்னிலக்க ஆற்றலை வலுப்படுத்துவதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பன்மொழிச் சமூகத்தில் பகுப்பாய்வு, தொடர்பு ஆகியவற்றுக்குச் செயற்கை நுண்ணறிவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து தனது கட்சி ஆய்வு செய்து வருவதாக திரு இங் தெரிவித்தார்.
இருப்பினும், தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் மின்னிலக்கத் தளங்கள் பாரம்பரியப் பிரசார முறைகளுக்கு மாற்றாக அமையாது என்றும் வாக்காளர்களுடன் நேரடித் தொடர்பைப் பேணுவதற்கும் உண்மையான ஆதரவை மதிப்பிடுவதற்கும் கொடிகள், சுவரொட்டிகள் மற்றும் நேரடிப் பிரசாரக் கூட்டங்கள் போன்றவை தொடர்ந்து அவசியமாக இருப்பதாக பாஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளன.

