ஷா ஆலம்: தேசிய முன்னணிக் கூட்டணியிலிருந்து விலகி எதிர்த்தரப்பான தேசியக் கூட்டணியில் மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) கட்சி சேர, அக்கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரிவு, கிளை, மஇகா தலைமைத்துவ நிலைகளில் உள்ள அடித்தள உறுப்பினர்களிடையே விநியோகிக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், நாட்டின் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு பிரதிநிதிகள் கூட்டம் ஒருமனதாக அதை ஏற்றுக்கொண்டது.
தேசிய முன்னணிக் கூட்டணியில் மஇகா கட்சியின் நிலையும் முக்கியத்துவமும் குறித்த விரிவான மதிப்பீடும் அக்கூட்டத்தில் கணக்கில் கொள்ளப்பட்டது.
“நாட்டின் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு, இந்தியச் சமூகத்தின் நலன்களுக்காகப் பாடுபடுவதற்கும் நாட்டின் தேசிய வளர்ச்சிக்குப் பங்களிப்பதற்கும் தற்போதைய கூட்டணியில் மஇகாவுக்கு போதுமான இடமில்லை,” என்று பிரதிநிதிகளின் தீர்மானம் கூறுவதாக சினார் ஹரியான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
“மலேசிய இந்தியச் சமூகத்தின் குரல்களுக்கு அதிக இடமளிக்கும் மேலும் உள்ளடக்கிய, கொள்கைப்பிடிப்பான ஒரு புதிய தளத்தை அமைக்க, தேசிய கூட்டணியில் அதிகாரபூர்வமாக இணைவதற்கு மஇகா தயாராக உள்ளது.
“இன்றைய கூட்டம், இம்முடிவு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் அதிகாரத்துவ விவகாரங்களைச் செயல்படுத்துவதற்கு மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கும் மத்திய செயற்குழுவுக்கும் முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது,” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.

